எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு தொழில்துறையில் கார்பன் தடத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 09 AUG 2024 3:51PM by PIB Chennai

2070 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லாத நிலையை  அடைய அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கி, குறுகிய காலத்தில் (நிதியாண்டு 2030-க்குள்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதன் மூலம் எஃகு தொழிலில்  கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. நடுத்தர காலத்திற்கு (2030-2047), பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு, கரியமில வாயு  சேகரிப்பு ஆகியவை கவனம் செலுத்தும் பகுதிகளாகும். நீண்ட காலத்திற்கு (2047-2070),  மாற்று தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கரியமில வாயு வெளியேற்றமே இல்லாத நிலையை அடைய உதவும். இந்த நோக்கத்திற்காக, எஃகுத் துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அரசு எடுத்துள்ள தொழில்நுட்ப நடவடிக்கைகள் வருமாறு:

 எஃகுத் துறையில் கரியமில வாயுவைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து  விவாதித்தல், பரிந்துரை செய்தல் ஆகியவற்றுக்காக தொழில்துறை, கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியல்தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் 14 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைப் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. இரும்பு மற்றும் எஃகு தயாரிப்பில் பசுமை ஹைட்ரஜனின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த இயக்கத்தின் கீழ் எஃகு துறையும் ஒரு பங்குதாரராக உள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய சூரிய சக்தி  இயக்கம், சூரிய சக்தியின் உற்பத்தியையும்  பயன்பாட்டையும்  ஊக்குவிக்கிறது, இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எஃகு தொழிலில் உமிழ்வைக் குறைப்பதில் பங்களிக்கிறது.

நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத் திட்டங்களில் உலக அளவில் கிடைக்கும் பல சிறந்த தொழில்நுட்பங்களை எஃகுத் துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2043652

-----

SMB/DL



(Release ID: 2043846) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi