சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத் துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டினர் பங்கேற்பு
Posted On:
07 AUG 2024 3:37PM by PIB Chennai
15.10.2020 முதல் நடைமுறைக்கு வரும் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, வைரம், தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற தாதுக்கள் உள்ளிட்ட உலோகம் மற்றும் உலோகம் அல்லாத தாதுக்களின் சுரங்கம் மற்றும் ஆய்வுக்காக 'தானியங்கி' முறையின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. டைட்டானியம் கொண்ட கனிமங்கள் மற்றும் அதன் தாதுக்களைத் தோண்டி எடுப்பதற்கும், பிரித்தெடுப்பதற்கும், அதன் மதிப்புக் கூட்டல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கும், 'அரசு' முறையின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. அணுசக்தித் துறையால் குறிப்பிடவே, பரிந்துரைக்கப்பட்ட பொருட்களை வெட்டியெடுப்பதில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், 1957 [எம்.எம்.டி.ஆர் சட்டம், 1957] 12.01.2015 முதல் திருத்தம் செய்யப்பட்டு, கனிம சலுகைகள் வழங்குவதற்காக ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சுரங்கத் துறையிலிருந்து மாநில அரசுகளுக்கு அதிக வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதும், வருவாய் பங்கை அதிகரிப்பதும் இந்த திருத்தத்தின் நோக்கமாகும்.
அதன்பிறகு, கனிம வள உற்பத்தியை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் சுரங்கத் துறையில் முதலீடுகளை அதிகரித்தல், கனிம ஆய்வில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் கனிம வளங்களை ஏலம் விடும் வேகத்தை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம், 1957 28.03.2021 மற்றும் 17.08.2023 தேதிகளில் திருத்தப்பட்டது. சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான இறுதி பயன்பாட்டு கட்டுப்பாடுகளை நீக்குதல், ஆய்வை மேற்கொள்வதற்காக அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வு முகமைகளை அறிவிக்க அனுமதித்தல் மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் கீழ், அத்தகைய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்தல், கனிம சலுகைகளை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் பல துறைகளின் முன்னேற்றத்திற்கு அவசியமான, முக்கியமான மற்றும் ஆழமான கனிமங்களின் ஆய்வு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை சில முக்கிய திருத்தங்களில் அடங்கும். இதில் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல், தொலைத்தொடர்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவாக, 2015 ஆம் ஆண்டு ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் மொத்தம் 395 கனிம தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, அவை தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 50 சுரங்கங்கள் ஏற்கனவே உற்பத்தியில் உள்ளன. மேலும், 23 தனியார் கனிம ஆய்வு முகமைகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
ஏலத்தில் விடப்பட்ட சுரங்கங்கள் செயல்படும் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏலத்தில் விடப்படும் சுரங்கங்களிலிருந்து மாநிலங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடி ஏல பிரீமியம் பெறப்படுகிறது. இத்தொகையானது, மாவட்ட கனிம அறக்கட்டளை மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளைக்கு, குத்தகைதாரர்கள் செலுத்தும் பங்குத் தொகை ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பங்குத் தொகையுடன் கூடுதலாக வழங்கப்படும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
---
MM/KPG/DL
(Release ID: 2042836)
Visitor Counter : 55