எரிசக்தி அமைச்சகம்
அனல் மின் நிலையங்களின் விரிவாக்கம்
Posted On:
29 JUL 2024 4:11PM by PIB Chennai
2031-32 ஆம் ஆண்டிற்குள் மதிப்பிடப்பட்ட மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, மத்திய மின்சார ஆணையத்தால் (சிஇஏ) உற்பத்தி திட்டமிடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி, 2032 ஆம் ஆண்டில் நாட்டிற்கு தேவைப்படும் அடிப்படை எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய, தேவையான நிலக்கரி மற்றும் பழுப்புநிலக்கரி அடிப்படையிலான அனல் மின்நிலையங்களின் எரிசக்தி உற்பத்தி திறன் தற்போது நிறுவப்பட்ட 217.5 ஜிகாவாட்டிற்கு பதிலாக 283 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2031-32க்குள் கூடுதலாக குறைந்தபட்சம் 80 GW நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய மின்சாரத் திட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கான மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு ஒரு மொகாவாட்டிற்கு ரூ. 8.34 கோடியாகும் (2021-22 விலை அளவில்). எனவே, 2031-32க்குள் கூடுதலாக அனல் மின்நிலையங்களை அமைப்பதற்கு குறைந்த பட்சம் ரூ. 6,67,200 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்திக்காக நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங் களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, மத்திய அரசு புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியா 20230 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 விழுக்காட்டை புதைபடிவமற்ற மாற்று சக்தி வாயிலாக உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைய, நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் வரை தானியங்கி வழியில் அனுமதித்தல் 2025 ஜூன் 30,க்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைக்கு தற்போது விதிக்கப்படும் கட்டணங்களை தள்ளுபடி செய்தல், மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்களை அமைத்தல் உள்ளிட்டவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த தகவலை மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் நாயக் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 2040433)
Visitor Counter : 35