நிலக்கரி அமைச்சகம்
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் உள்ள முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை கபில் ஆராய்ந்து வருகிறது
Posted On:
31 JUL 2024 3:47PM by PIB Chennai
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் கன்சல்டன்சி லிமிடெட் ஆகிய மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (கபில்) என்ற கூட்டு முயற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கங்களை அடைவதற்காக, கபில் தற்போது லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற வெளிநாடுகளின் முக்கியமான கனிம சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது மற்றும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் திட்டங்களில் முன்முயற்சிகளை எடுத்து வருகிறது.
அர்ஜென்டினாவில், அந்நாட்டு அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒரு ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கபில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் அர்ஜென்டினாவின் கட்டமார்கா மாகாணத்தில் லித்தியம் தொகுதிகளின் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான பிரத்யேக உரிமைகளைப் பெற்றுள்ளது. ஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான சட்டரீதியான அனுமதிகள் மற்றும் பிற நடவடிக்கைகளைப் பெறுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியாவின் லி & கோ சுரங்க சொத்துக்களில் கூட்டுமுயற்சியில் ஈடுபடவும், முதலீடு செய்யவும் ஆஸ்திரேலிய அரசின் தொழில், அறிவியல் மற்றும் வளங்கள் துறையின் முக்கியமான கனிமங்கள் அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கபில் கையெழுத்திட்டுள்ளது. நாட்டிற்கு லித்தியம் மற்றும் கோபால்ட் நீடித்த விநியோகத்தை உறுதி செய்வதற்கான நீண்டகால முதலீட்டு முடிவுகளை எடுக்கவும், உடனடி ஏற்பாடுகளை செய்யவும் கபில் நிறுவனத்திற்கு இது உதவும். சிலியில் உப்பு வகை லித்தியம் தொகுதியை ஆய்வு செய்ய சிலி அரசுக்கு சொந்தமான இனாமியுடன் என்.டி.ஏ ஒப்பந்தத்தில் கபில் கையெழுத்திட்டுள்ளது. நீண்டகால முதலீட்டிற்காக முக்கியமான கனிமங்களின் வளமான ஆற்றலைக் கொண்ட பிற நாடுகளில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய கபில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039606
******
BR/KR/DL
(Release ID: 2040319)
Visitor Counter : 41