சுரங்கங்கள் அமைச்சகம்
முக்கியமான கனிம தொகுதிகளுக்கான ஏலம்
Posted On:
31 JUL 2024 3:47PM by PIB Chennai
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) (எம்.எம்.டி.ஆர்) திருத்தச் சட்டம், 2023 மூலம் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 இல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது, இதன் மூலம் எம்.எம்.டி.ஆர் சட்டம், 1957 இன் அட்டவணை-I க்கு பகுதி டி-இல் 24 முக்கியமான கனிமங்களை ஏலம் விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை லித்தியம், கிராபைட், வனேடியம், நிக்கல், குரோமியம், கிளாக்கோனைட், பிளாட்டினம் வகை தனிமங்கள் மற்றும் பாஸ்போரைட் ஆகிய கனிமங்கள் அடங்கிய 14 முக்கிய கனிம தொகுதிகள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த தொகுதிகள் பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பரவியுள்ளன.
மேலும், ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து கிராபைட், கிளாக்கோனைட், பாஸ்போரைட், நிக்கல், பொட்டாஷ், டங்ஸ்டன், வனேடியம், கிளாக்கோனைட், கோபால்ட் மற்றும் குரோமியம் ஆகிய 21 முக்கிய கனிம தொகுதிகள் ஏலத்திற்கு அறிவிக்கை செய்யப்படுகின்றன.
இந்தியாவின் கேந்திர நலனுக்கு முக்கியமாக இருக்கும் கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாக்கவும், மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்குத் தேவையான முக்கியமான கனிமங்களின் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 மற்றும் கடலோரப் பகுதிகள் கனிம (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2002 ஆகியவை 2023 இல் திருத்தப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் தன்னிறைவை உறுதி செய்து, முக்கியமான கனிமங்களின் ஆய்வு மற்றும் சுரங்கத்தை மேம்படுத்துவதை இந்த திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், முக்கிய கனிமங்கள் உட்பட ஆழமாக வேரூன்றி உள்ள 29 கனிமங்களுக்கு ஆய்வு உரிமம் என்ற புதிய கனிம சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிமம் பெற்றவர் இக்கனிமங்களை ஆய்வு மேற்கொள்ள இயலும்.
2023-ஆம் ஆண்டில், சுரங்க அமைச்சகம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கலுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக சுரங்க மற்றும் கனிமத் துறையில் பணிபுரியும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் எம்.எஸ்.எம்.இகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நிதியளிக்கும் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியது.
சுரங்க அமைச்சகம், கனிம வளங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சிலி, மொசாம்பிக் போன்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 244 புவியியல் அறிக்கைகளையும், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு கனிமங்கள் அடங்கிய 324 புவியியல் குறிப்பாணைகளையும் முக்கிய கனிம மாநிலங்களுக்கும், சுரங்க அமைச்சகத்துக்கும் கனிம தொகுதிகளை ஏலம் விடுவதற்காக ஒப்படைத்துள்ளது.
மேற்கண்ட முயற்சிகள், கனிம வளங்கள் கிடைப்பதையும், நம்பகமான விநியோகச் சங்கிலியையும் உறுதி செய்வதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039605
*****
BR/KR/DL
(Release ID: 2040304)
Visitor Counter : 35