கூட்டுறவு அமைச்சகம்
ஏற்றுமதி, இயற்கை வேளாண் பொருட்கள், தரமான விதைகள் ஆகியவற்றுக்கு தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள்
Posted On:
31 JUL 2024 3:23PM by PIB Chennai
ஏற்றுமதி, இயற்கை வேளாண் பொருட்கள், தரமான விதைகள் ஆகியவற்றுக்கு தேசிய அளவிலான 3 பல மாநில கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த சங்கங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பணிகளில் ஆர்வமுள்ள அனைத்து நிலையிலான கூட்டுறவு சங்கங்களும் இவற்றில் உறுப்பினராக தகுதி பெற்றவையாகும்.
தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் 5 ஊக்குவிப்பாளர்களிடம் தலா ரூ.100 கோடி பெற்று ரூ.500 கோடி மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.2 ஆயிரம் கோடி என்றும் அமைச்சர் கூறினார். கூட்டுறவு சங்கங்கள், அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றின் பொருட்களையும், சேவைகளையும் நேரடியாக ஏற்றுமதி செய்ய இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தேசிய இயற்கை வேளாண் பொருட்கள் கூட்டுறவு நிறுவனம் ரூ.100 கோடி மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.500 கோடியாகும். இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிதியுதவிக்கு ஏற்பாடு செய்வது, சான்று வழங்குவது, சந்தைப்படுத்துவது, கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, பதப்படுத்துவது, பொருட்களைக் கொண்டு செல்ல போக்குவரத்துக்கு வசதி செய்வது போன்றவற்றுக்கு இது உதவியாக இருக்கும்.
இந்திய விதைகள் கூட்டுறவு சங்கம் ரூ.250 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமாக ரூ.500 கோடியை பெற்றுள்ளது. விளைச்சலை அதிகரிப்பதற்கு தரமான விதைகளை உருவாக்குவது, கொள்முதல் செய்வது, விநியோகிப்பது ஆகியவை இதன் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் தரமான விதைகள் உற்பத்தி செய்வது, வேளாண் பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதோடு, வேளாண் துறையிலும், கூட்டுறவு துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க வழிவகுக்கும் என்ற தகவலையும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039586
---------------
SMB/RS/K/DL
(Release ID: 2039772)