விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் கிசான் திட்ட அமலாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2024 6:28PM by PIB Chennai
பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி (பிஎம் கிசான், PM-KISAN) திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிரதமரால் பிப்ரவரி 2019-ல் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000 / - நிதி மூன்று சம தவணைகளில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடி பணப் பரிமாற்ற முறையில் மாற்றப்படுகிறது. இத்திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகும்.
இடைத்தரகர்களின் எந்த தலையீடும் இல்லாமல் திட்டத்தின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்துள்ளது. பயனாளிகளை பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசு இதுவரை 17 தவணைகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 3.24 லட்சம் கோடியை வழங்கியுள்ளது.
மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள், துறைகளின் கருத்துக்களை பரிசீலித்த பிறகு, வேளாண் செலவுகள் - விலைகளுக்கான ஆணையத்தின் (சிஏசிபி) பரிந்துரைகளின் அடிப்படையில் 22 கட்டாய வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை பரிந்துரைக்கும் போது, ஒட்டுமொத்த தேவை-வழங்கல் நிலைமைகள், உற்பத்தி செலவு, உள்நாட்டு - சர்வதேச விலைகள், பயிர்களுக்கு இடையேயான விலை சமநிலை, விவசாயம் - விவசாயம் அல்லாத துறைகளுக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகள், பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய தாக்கம், நிலம், நீர் உள்ளிட்ட உற்பத்தி வளங்களின் பயன்பாட்டு, உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகத் தோகை போன்ற முக்கியமான காரணிகளை சிஏசிபி கருத்தில் கொள்கிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 2039560)
வருகையாளர் எண்ணிக்கை : 159