எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு தொழிலில் கார்பன் நீக்கத்தை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்

Posted On: 30 JUL 2024 3:50PM by PIB Chennai

எஃகுத் தொழிலில் கரியமில வாயு நீக்கத்தை ஊக்குவிப்பதற்காக அரசு கீழ்க்கண்ட கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

(1) எஃகுத் துறையில் கார்பன் நீக்கம் குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கும், பரிந்துரைப்பதற்கும் தொழில், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன் 14 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள் "இந்தியாவில் எஃகு துறையை பசுமையாக்குதல் மற்றும் செயல் திட்டம்" என்ற ஒருங்கிணைந்த அறிக்கையாக தொகுக்கப்பட்டுள்ளன, இது இந்தியாவில் எஃகு துறைக்கான செயல் திட்டத்தை விளக்குகிறது.

(2) எஃகு ஸ்கிராப் மறுசுழற்சி கொள்கை, 2019, சுழல் பொருளாதாரம் மற்றும் எஃகு துறையின் பசுமை மாற்றத்தை ஊக்குவிக்க உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கழிவு கிடைப்பதை மேம்படுத்துகிறது. பல்வேறு ஆதாரங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்புகளில் இருந்து உருவாக்கப்படும் இரும்பு கழிவை அறிவியல் பூர்வமாக செயலாக்குவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் இந்தியாவில் உலோக கழிவு மையங்களை நிறுவுவதற்கான கட்டமைப்பை இது வழங்குகிறது. பிரித்தெடுக்கும் மையம் மற்றும் கழிவு செயலாக்க மையம் அமைப்பதற்கான நிலையான வழிகாட்டுதல்கள், அரசு மற்றும் உரிமையாளரின் பொறுப்புகளை இந்தக் கொள்கை வழங்குகிறது.

(3) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தில் எஃகு ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

(4) மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 ஆகியவற்றின் கட்டமைப்பின் கீழ், மோட்டார் வாகனங்கள் (வாகன அழிப்புக் கொள்கையின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகள், 2021 அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. எஃகுத் துறையில் கழிவு கிடைப்பதை அதிகரிக்க இது திட்டமிட்டுள்ளது.

(5) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய சூரிய இயக்கம் சூரிய சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் எஃகு தொழில்துறையின் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.

(6) மேம்படுத்தப்பட்ட எரிசக்தி திறனுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்பாடு, சாதனை மற்றும் வர்த்தகம் (பிஏடி) திட்டம், எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்க எஃகு தொழிலை ஊக்குவிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் திட்டத்தின் மூன்றாம் சுழற்சி நிறைவடையும் வரை, எஃகுத் துறையைச் சேர்ந்த 167 அலகுகள் 5.583 மில்லியன் டன் மொத்த மின்சாரத்தை சேமித்துள்ளன, இதன் விளைவாக 20.52 மில்லியன் டன் கரியமில வாயுவுக்குச் சமமான உமிழ்வு குறைந்துள்ளது.

(7) ஜப்பானின் புதிய எரிசக்தி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு எரிசக்தி திறன் மேம்பாட்டிற்கான மாதிரி திட்டங்கள் எஃகு ஆலைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க 4 மாதிரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

PKV/RR/KR/DL


(Release ID: 2039157) Visitor Counter : 48
Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP