சுற்றுலா அமைச்சகம்
தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள்
प्रविष्टि तिथि:
29 JUL 2024 4:31PM by PIB Chennai
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், சுதேசி தர்ஷன் 2.0 மற்றும் பிரசாத் எனப்படும் யாத்திரை புத்துயிர் ஊட்டல் மற்றும் ஆன்மீக, பாரம்பரிய, வசதிகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய 2 திட்டங்களின் கீழ் மொத்தம் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இதில் 9 பெரிய பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரசாத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நவக்கிரக ஸ்தலங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. திங்களூர் கைலாச நாதர் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில், திருவிடை மருதூர் சூரியனார் கோயில், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் ஆலயம், கீழப்பெரும்பள்ளம் நாகநாதஸ்வாமி கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தவிர சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் உள்ள நவகிரக ஸ்தலமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் ஆன்மீக பூங்கா ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், சவால் அடிப்படையிலான ஸ்தல மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுச்சேரியில் ஒயிட் டவுன் மற்றும் ஆன்மீக ஸ்தலங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவு பகுதிகளும் மேம்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
வலிமையான கிராம ஸ்தலங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் மாமல்லபுரமும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் நகரங்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038520
***
MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2038678)
आगंतुक पटल : 108