விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நாட்டில் வேளாண் துறையில் புதுமை நிறுவனங்கள்

Posted On: 26 JUL 2024 6:30PM by PIB Chennai

வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளித்து வேளாண் துறையில் புதுமைப்படைப்பு நிறுவனங்களை ஊக்குவிக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ராஷ்ட்ரிய விவசாயிகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 2018-19-ம் ஆண்டுமுதல் “புத்தாக்கம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் மேம்பாட்டு” திட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயல்படுத்தி வருகிறது. நாட்டில் புதுமைப்படைப்பு நிறுவன கட்டமைப்பை ஊக்குவிப்பதற்காக நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளித்து புத்தாக்கம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் திறனை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும், வேளாண் துறையில் புதுமைப்படைப்பு நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்தி பயிற்சி அளிக்கவும் இதுவரை 5 அறிவுசார் கூட்டாளிகள் மற்றும் 24 ராஷ்ட்ரிய விவசாயிகள் வளர்ச்சித் திட்ட வேளாண் வர்த்தக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்கீழ், யோசனை மற்றும் சிந்தனைக்கு முந்தைய நிலையில் ரூ.5 லட்சம் வரையும், தொழில் தொடங்கும் நிலையில் ரூ.25 லட்சம் வரையும் வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறையில் உள்ள தொழில்முனைவோருக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. தங்களது பொருட்கள், சேவைகள், வியாபார கட்டமைப்புகள் போன்றவற்றை சந்தைக்கு கொண்டுவரவும், உற்பத்தி மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யும். இந்தத் திட்டத்தின்கீழ், அறிவுசார் கூட்டாளிகள் மற்றும் ராஷ்ட்ரிய விவசாயிகள் நல திட்ட வேளாண் வர்த்தக அமைப்புகள் மூலம், புதுமைப்படைப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மைத் துறையில் உள்ள புதுமைப்படைப்பு நிறுவனங்களை பல்வேறு தரப்பினருடனும் இணைத்து அவர்களது தொழிலை மேம்படுத்த வேளாண்மை புதுமைப்படைப்பு மாநாடுகள், வேளாண் கண்காட்சிகள், இணைய கருத்தரங்குகள், பணிமனைகள் போன்ற பல்வேறு தேசிய அளவிலான திட்டங்களை இந்திய அரசு நடத்திவருகிறது.

இதற்கும் மேலாக, வேளாண் துறையில் உள்ள புதுமைப்படைப்பு நிறுவன கட்டமைப்புகளை ஊக்குவிக்க 2023—24—ஆம் ஆண்டுமுதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.300 கோடி அளவுக்கான வேளாண் ஊக்குவிப்பு நிதியத்துக்கு இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வேளாண் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்காக புத்தாக்க தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமைப்படைப்பு நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான உதவியை வேளாண்மை ஊக்குவிப்பு நிதியம் வழங்கும்.

ராஷ்ட்ரிய விவசாயிகள் வளர்ச்சித் திட்டத்தின் “புத்தாக்கம் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் வளர்ச்சித் திட்ட”த்தின்கீழ், இந்த புதுமைப்படைப்புடன் கூடிய நிறுவனங்களுக்கு 2019-2020 முதல் 2023-24 வரையான காலத்தில் ரூ.122.50 கோடி நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து பல்வேறு வகையான வேளாண் துறைகள் மற்றும் அதுதொடர்பான துறைகளில் இதுவரை 1,708 வேளாண் புதுமைப்படைப்பு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், வேளாண் புதுமைப்படைப்பு நிறுவனங்களுக்கான ஆதரவை அளித்து அதன் வளர்ச்சியை எட்டும் பணிகள், பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்த வேளாண் புதுமைப்படைப்பு நிறுவனங்கள் துல்லிய வேளாண்மை, வேளாண்மை நவீனமயமாக்குதல், வேளாண் பொருட்களை எடுத்துச் செல்வது மற்றும் விநியோக சங்கிலி, கழிவுகளை வளமாக மாற்றுவது, இயற்கை வேளாண்மை,, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை போன்ற வேளாண்மை மற்றும் அதுதொடர்பான பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைப்படைப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் ஆகியவை நாட்டில் விவசாயம் மற்றும் அதுதொடர்பான துறைகளில் தொழில்நுட்பத்தை நவீனமயமாக்கி,, புத்தாக்க தீர்வுகளை வழங்குகின்றன. பாரம்பரிய வேளாண் முறைகள் எதிர்கொண்டுவரும் பல்வேறு சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் இந்த புதுமைப்படைப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 2038139) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP