சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைப் பாலங்களை ஆய்வு செய்ய புதிய அமைப்பு உருவாக்கம்

Posted On: 25 JUL 2024 12:24PM by PIB Chennai

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பாகும். நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் இடிந்து விழுந்த சில சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பாலங்கள் இடிந்து விழுந்த விவரங்கள், உயிரிழந்தவர்கள், புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  சலுகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இணைப்பில் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை,  2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக்  கோளாறு காரணமாக விழுந்தது.  இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான  நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.

தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பை அமைச்சகம் மேற்கொள்கிறது. பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் பழுதுபார்ப்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுள்ள பாலங்களின் ஆய்வு மற்றும் நிலை கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து இடர்பாடுகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் பொருத்தமான பழுதுபார்ப்பு  புனரமைப்பு  ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாலங்களின் கட்டமைப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பிற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி ஏல ஆவணங்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாலங்களின் நிலை மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு  புனரமைப்பு  புனரமைப்பு ஆகியவற்றிற்கான அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கும் செயல்முறைக்காக விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036680

*** 

PKV/KPG/KR



(Release ID: 2036751) Visitor Counter : 17


Read this release in: Hindi , English , Urdu , Hindi_MP