பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிதடத்தில் ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் பரிசோதனை கூடங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 02 JUL 2024 6:50PM by PIB Chennai

தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிதடத்தில், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் தொடர்பான, மூன்று அதிநவீன பரிசோதனை கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் (DTIS), புதுதில்லியில் இன்று (02.07.2024), பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) இடையே கையெழுத்தானது.

மத்திய/ மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான 400 கோடி ரூபாய் மதிப்பிலான DTIS திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மே 2020-ல் தொடங்கி வைத்தார். உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவித்து, ராணுவ தளவாட இறக்குமதியை குறைத்து, தற்சார்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பாதுகாப்புத் தொழில் பெருவழித்தடத்தில் அமையும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்காக, தமிழ்நாட்டில் 4, உத்தரப்பிரதேசத்தில்  3 என மொத்தம் 7 பரிசோதனைக் கூடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3 பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டம் மூலம், அரசு  75 சதவீத நிதியுதவியை வழங்கும். எஞ்சிய 25 சதவீதம், இதற்கென அமைக்கப்பட்ட இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய- மாநில அரசுகளை உள்ளடக்கிய  பிரத்தியேக அமைப்பால் வழங்கப்படும்.

ஆளில்லா விமான பரிசோதனை வசதியை  கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான்,  சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும். மற்ற இரு பரிசோதனைக் கூடங்களுக்கான வசதியை பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்தியா ஆப்டெல்   நிறுவனங்கள் வழங்கும்.

இத்திட்டம் நிறைவடையும் போது, பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு  அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும்.

***

MM/RS/DL


(Release ID: 2030292) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP