பாதுகாப்பு அமைச்சகம்

சிஏபிஎஃப், போலீஸ் மற்றும் என்டிஆர்எஃப் ஆகியவற்றில் டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை சேர்ப்பதன் நிலையை மறுஆய்வு செய்ய டிஆர்டிஓ 8வது தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தை ஏற்பாடு செய்தது

Posted On: 10 MAY 2024 7:36PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஒ) 8வது தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தை மே 09, 2024 அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்தது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுத காவல் படைகள் (சிஏபிஎஃப்), காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றில் டிஆர்டிஓ தொழில்நுட்பங்களை சேர்ப்பதன் நிலையை மறுஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்கள் மெய்நிகர் வழியே கூட்டத்தில் பங்கேற்றன. கூட்டத்தில் பல்வேறு துறைகள் பங்கேற்று அடைந்த முன்னேற்றத்தை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றது. இது அடுத்த ஆறு மாதங்களுக்கான நடவடிக்கைகளின் திட்டங்களையும் வகுத்தது.

கூட்டத்தின் ஒரு பகுதியாக டிஆர்டிஓ-வால் உருவாக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புகளின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கு ஆயுத அமைப்புகள், தகவல் தொடர்பு, உள்நாட்டு பாதுகாப்பு, விஐபி பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற பல்வேறு களங்களில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் தொடர்பு தலைமை இயக்குநர்  திருமதி சந்திரிகா கௌசிக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை, எஸ்எஸ்பி, என்டிஆர்எஃப், என்எஸ்ஜி, அசாம் ரைபிள்ஸ், ஐபி மற்றும் தில்லி காவல்துறை ஆகியவற்றின் ஐஜிக்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் திருமதி ஹர்சரண் கவுரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தற்சார்பை அடைவதை நோக்கி பாதுகாப்பு சேவைகளுக்கான முக்கியமான மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள முதன்மையான ஆராய்ச்சி அமைப்பாக டிஆர்டிஓ உள்ளது. உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் படைகளின் கீழ் மத்திய போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளை நவீனமயமாக்க உதவுவதற்காக, டிஆர்டிஓ மற்றும் எம்.எச்.ஏ இடையே 2012 ஆம் ஆண்டில் டிஆர்டிஓ உருவாக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை இந்தப் படைகளில் சேர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

***

AD/PKV/DL



(Release ID: 2020368) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi