அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டு விண்வெளி கண்டுபிடிப்புக்கு அதிகாரம் அளிக்கிறது: துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் சூரிய மின் தகடு ஆய்வுத் திட்டத்திற்கு நிதியளிக்கிறது
Posted On:
24 APR 2024 6:37PM by PIB Chennai
விண்வெளித் துறையில் தற்சார்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், உள்நாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், ஹைதராபாத்தில் உள்ள துருவா ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. "சூரிய மின் தகடு ஆய்வு மற்றும் சோதனை வசதி" என்ற திட்டத்திற்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. இது விண்வெளித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
இந்தத் திட்டத்தில் விண்கலப் பயன்பாடுகளுக்கு ஏற்ப சோதனை செயல்முறைகளை உருவாக்கி வணிகமயமாக்குவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்படும். புவி சுற்றுப்பாதைப் பயன்பாட்டில் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சூரிய மின் தகடு உற்பத்தியில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அதிநவீன சூரிய மின்தகடு தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் துருவா ஸ்பேஸ் நிறுவனத்திற்கு ஆதரவு அளிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதற்கும், மேம்பட்ட மற்றும் குறைந்த செலவிலான விண்வெளித் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு சஞ்சய் நெக்கந்தி கூறுகையில், "துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் முக்கிய விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் ஒன்றாக ஆளில்லா விண்கலங்களுக்கான சூரிய மின்தகடுகளின் வடிவமைப்பு, அமைந்துள்ளது என்றார். பெரிய செயற்கைக்கோள்களுக்கும் விண்வெளி மின்சக்தித் தீர்வுகளை வழங்குவது தங்களது நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
----
(Release ID: 2018758)
ANU/SMB/PLM/KPG/RR
(Release ID: 2018823)
Visitor Counter : 65