சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
Posted On:
16 APR 2024 5:09PM by PIB Chennai
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் 16 ஏப்ரல் 2024 அன்று சிஎஸ்ஐஆர் வளாகத்தில் சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சிஎஸ்ஐஆர் சென்னை வளாகம் ஆகியவற்றால் கூட்டாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி இயக்குநரும், சி.எம்.சி.யின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என்.ஆனந்தவல்லி தலைமை தாங்கினார். சென்னை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி.யின் தலைமை விஞ்ஞானி டாக்டர் கே.சதீஷ் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய சமுதாயத்திற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கும் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை டாக்டர் சதீஷ் குமார் நினைவுகூர்ந்தார்.
டாக்டர் என். ஆனந்தவல்லி தமது தலைமையுரையில் டாக்டர் அம்பேத்கர் சமத்துவத்தின் அடையாளமாக விளங்குகிறார் என்று குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கரை வசீகரமான, அசாதாரணமான, பன்முகத் திறமை வாய்ந்த மனிதராகவும், இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவராகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி.யின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி திரு ஆர்.டி.சதீஷ் குமார் சிறப்பு விருந்தினரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். விழாவின் தலைமை விருந்தினரான திரு. அசோக் வர்தன் ஷெட்டி டாக்டர் அம்பேத்கர் மற்றும் அவரது கருத்துக்கள் குறித்து எழுச்சி உரை நிகழ்த்தினார். பாபாசாகேப் ஒரு ஆளுமை என்றும், அவரது உண்மையான மகத்துவத்தை அவரது வாழ்நாளில் உணர முடியவில்லை என்றும் அவர் கூறினார். பாபாசாகேப் இந்தியாவின் சிறந்த சிந்தனையாளர், அவரது சமகாலத்தவர்களை விட உயர்ந்தவர் என்று அவர் கூறினார். பாபாசாகேப் அனைத்து மனிதர்களுக்காகவும் நின்றார் என்றும், அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் சமுதாயத்தில் நிலவும் அநீதிகளுக்கு எதிரான அறப்போரின் வரலாறாகவே இருந்தது என்றும் அவர் கூறினார்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை மிகக் கவனமாக உருவாக்குவதில் பாபாசாகேப்பின் பங்களிப்பு குறித்து சிறப்பு விருந்தினர் விரிவாகப் பேசினார். டாக்டர் அம்பேத்கர் மற்றும் அமெரிக்காவின் நிறுவனர்களில் ஒருவரும், பிரெஞ்சு புரட்சியாளரும், தத்துவஞானியும், அரசியல் ஆர்வலருமான தாமஸ் பெயின் ஆகியோரின் வாழ்க்கைக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை விளக்கிய திரு ஷெட்டி, இருவரும் சமூக தீமைகளுக்கு எதிராக போராடிய உண்மையான புரட்சியாளர்கள் என்றும், இன்றும் சமூகத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்றும் கூறினார்.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.ஆர்.ஐ.ஆர்.ஐ.யின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் சி.குமரவேலு நன்றியுரை வழங்கினார்.


***
AD/PKV/AG/RR
(Release ID: 2018043)
Visitor Counter : 127