இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

உலக குவாண்டம் தினம் 2024-ஐ இந்தியா கொண்டாடுகிறது: குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க இந்தியா விரும்புகிறது

Posted On: 13 APR 2024 5:45PM by PIB Chennai

உலக குவாண்டம் தினம் 2024 நாளை (ஏப்ரல் 14, 2024) கொண்டாடப்படுகிறது.  குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் உலகளாவிய முன்னணி நாடாக மாறும் நோக்கத்துடன் இந்தியா இந்த தினத்தை சிறப்பாக கொண்டாடவுள்ளது.

குவாண்டம் மெக்கானிக்ஸ், அணுக்கள் மற்றும் துணை அணு துகள்கள் பற்றிய ஆய்வு, இப்போது பொறியியல் களத்தில் புதுமையான மற்றும் மாறுபட்ட பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தில் (ஜிபிஎஸ்) பயன்படுத்தப்படும் எல்.ஈ.டி-கள், லேசர்கள் மற்றும் அதி-துல்லியமான அணு கடிகாரங்கள் போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க இதன் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றனர். குவாண்டம் கம்ப்யூட்டிங், குவாண்டம் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் குவாண்டம் சென்சிங் பயன்பாடுகளுக்கான குவாண்டம் அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கையாளுவதற்கும் இப்போது கணிசமான கவனம் செலுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களிடையே குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, 2022-ம் ஆண்டில் ஒரு சர்வதேச முன்முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அன்று உலக குவாண்டம் தினமாக கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் திரு அஜய் குமார் சூட் கூறுகையில், குவாண்டம் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தாக்கத்தை சுட்டிக்காட்டினார். குவாண்டம் தொழில்நுட்பம் என்பது புதிய தொழில்நுட்பம் எனவும் இது பல ஆண்டு அடிப்படை ஆராய்ச்சிக்குப் பிறகு எட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மருத்துவம் முதல் பல மேம்பட்ட பொருட்களின் கண்டுபிடிப்பு மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு வரையிலான பல பிரிவுகளில் உலகிற்கு மகத்தான ஆற்றலை வழங்க இது வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய செயல்முறைகள் உருவாக்கப்படுவதால் குவாண்டம் தொழில்நுட்பத்தின் நெறிமுறைகளை உறுதி செய்வதும் முக்கியமானதாகிறது என அவர் குறிப்பிட்டார். இதற்காக, பரந்த அளவில் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உலக அரங்கில் குவாண்டம் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கான இந்தியாவின் திட்டங்கள் குறித்து பேசிய பேராசிரியர் திரு அஜய் குமார் சூட், இந்தியாவின் தேசிய குவாண்டம் இயக்கம் (NQM) இந்தியாவின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவால் (PM-STIAC) உருவாக்கப்பட்ட தேசிய குவாண்டம் இயக்கம் (NQM), 2023 ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட்டது. எட்டு ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ. 6003.65 கோடி செலவில் இதை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரித்து, இப்பிரிவில் புதுமையான நவீனச் சூழல் அமைப்பை உருவாக்குவது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

***************

SRI/PLM/DL



(Release ID: 2017857) Visitor Counter : 106


Read this release in: English , Urdu , Hindi