பாதுகாப்பு அமைச்சகம்

ஆபரேஷன் மேகதூத் தொடங்கப்பட்ட தினம்

Posted On: 13 APR 2024 2:38PM by PIB Chennai

1984ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) வடக்கு லடாக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் உயரமான பகுதிகளைப் பாதுகாக்க சியாச்சின் பனிப்பாறைக்கு முன்னேறியபோது மேகதூத் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை விமானம் மூலம் அழைத்துச் சென்று பனிப்பாறை சிகரங்களில் இறக்கப்பட்டனர். 1984-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டாலும், விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே 1978 முதல் சியாச்சின் பனிப்பாறையில் செயல்பட்டு வந்தன.

1984ம் ஆண்டில் சியாச்சினில்  பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு கவலைக்குரியதாக மாறியது. அந்தப் பகுதியில் பாகிஸ்தானிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்ற உளவுத்துறை தகவல்களுக்குப் பின்னர், அதை முறியடிக்க இந்தியா முடிவு செய்தது. சியாச்சினின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடைய இந்தியா ஆபரேஷன் மேகதூத் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த முயற்சியில் இந்திய விமானப் படை ஈடுசெய்ய முடியாத பங்கை வகித்தது. இந்திய விமானப்படையின்  விமானங்கள் பொருட்களை உயரமான விமான தளங்களுக்கு கொண்டு சென்றன.  சுமார் 300 படையினர் பனிப்பாறையின் முக்கியத்துவம் வாய்ந்த சிகரங்கள் மற்றும் கணவாய்களில் நிலைநிறுத்தப்பட்டனர்.

உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் தீவிர பருவ நிலை சூழல்களுக்கு பெயர் பெற்றது. இங்கு 40 ஆண்டுகளாக ராணுவ செயல்பாடுகள் தொடர்கின்றன.  78 கிலோ மீட்டர் நீளமுள்ள பனிப்பாறையில் இந்திய விமானப்படை ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்படுகிறது.

***************

SRI/PLM/DL



(Release ID: 2017851) Visitor Counter : 91


Read this release in: English , Urdu , Hindi , Marathi