பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் மாநிலம் கர்சவான் மாவட்டம் பதம்பூரில் பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான மையத்தை நிறுவுவதற்கு ரூ.10 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

Posted On: 16 MAR 2024 2:53PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஜார்க்கண்ட் மாநிலம் கர்சவான் மாவட்டம் பதம்பூரில் பழங்குடியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்துக்கு காணொலிக் காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த மையம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை சித்தரித்து அவர்களது கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும்.

நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய திரு அர்ஜுன் முண்டா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக பாரம்பரியம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக கூறினார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்திய அறிவு முறைகள், பாரம்பரியம் மற்றும் கலாச்சார நெறிமுறைகளை பாதுகாத்து ஊக்குவிக்கும் பணிக்குப் பிரதமர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்சவான் மாவட்டத்தில் இந்த மையத்தை அமைப்பதற்காக ரூ.10 கோடியை  மத்திய பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் ஒதுக்கி இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மற்றொரு நிகழ்ச்சியில், புதுதில்லியில் உள்ள பாரதிய ஆதிம் ஜாதி சேவக் சங்கத்தில் (BAJSS) மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் புதுப்பிக்கப்பட்ட தனித்துவமான பழங்குடியினர் அருங்காட்சியகம், மின்னணு நூலகம் மற்றும் பழங்குடியினர் பெண்கள் விடுதி ஆகியவற்றை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா இன்று திறந்து வைத்தார். பிஏஜேஎஸ்எஸ் அமைப்பு, 1948-ம் ஆண்டில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக, சமூக சேவகர் தக்கர் என்று பிரபலமாக அறியப்பட்ட அமிர்தலால் விட்டல்தாஸ் தக்கர் என்பவரால் நிறுவப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அர்ஜுன் முண்டா,  நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில்  பழங்குடியின வீரர்கள் செய்த தியாகங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை சுட்டிக்காட்டினார். இந்த தீர்மானத்துடன், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்  அருங்காட்சியகத்தை புதுப்பிக்க முடிவு செய்து, இந்த திட்டத்திற்காக ரூ. 3 கோடிக்கு மேல் ஒதுக்கியதாகக் கூறினார்.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 2015225) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi