கனரகத் தொழில்கள் அமைச்சகம்

வாகனம் மற்றும் மின்சார வாகனத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்க ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 13 MAR 2024 4:46PM by PIB Chennai

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி ரூர்க்கி) ஆகியவை வாகன மற்றும் மின்சார வாகனத்துறைகளில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கனரகத் தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூர்க்கி ஐஐடி சார்பில் பேராசிரியர் கே.கே.பந்த் மற்றும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் அந்த அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு விஜய் மிட்டல் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒத்துழைப்பின் மூலம், போக்குவரத்தின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டங்களில் இருதரப்பின் ஒருங்கிணைந்த அறிவு மற்றும் வளங்கள்  பயன்படுத்தப்படும்.

இந்த கூட்டு ஒத்துழைப்பு புதிய கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியையும் குறைக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, தற்சார்பு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தித் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை இந்த முயற்சிகள் வலுப்படுத்தும் என்றார். உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதில் கனரக தொழில்துறையும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். இந்தத் துறை மேம்பாட்டுக்காக உத்தராகண்ட் முதலமைச்சர் மற்றும் ரூர்க்கி ஐஐடி மேற்கொள்ளும் முயற்சிகளையும் அவர்களது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே பாராட்டினார்.  

உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பேசுகையில், இந்த ஒப்பந்தம் மின்சார வாகனத் துறைக்கு அதிக அளவில் பயனளிக்கும் என்றார். புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து செயல்படும் ரூர்க்கி ஐஐடி-யையும் அவர் பாராட்டினார்.

***

Release ID: 2014190

AD/PLM/KRS



(Release ID: 2014328) Visitor Counter : 64


Read this release in: English , Urdu , Hindi