குடியரசுத் தலைவர் செயலகம்
ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Posted On:
28 FEB 2024 1:17PM by PIB Chennai
ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 28, 2024) நடைபெற்ற ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக உள்ளனர் என்று கூறினார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நமது நாடும் ஒன்று என அவர் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் இன்று உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 2030-ம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். இளைஞர்களுக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்புகள் இருப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் பொறுப்பு தங்களுக்கான நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது மட்டுமல்ல எனவும், சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு எப்போது வந்தாலும், தமது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல உணர்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். ஜார்க்கண்ட் மக்களுடன், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுடன் தமக்கு நல்ல இணைப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். பழங்குடி வாழ்க்கை முறையில் உள்ள பல மரபுகள், மற்ற மக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று அவர் கூறினார். பழங்குடியின மக்கள் இயற்கையுடன் சமநிலையில் வாழ்வதாகவும், அவர்களின் வாழ்க்கை முறைகளை நாம் கற்றுக்கொண்டால், புவி வெப்பமடைதல் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் இந்த வளாகம் பசுமை கட்டடக்கலை கொள்கைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். படிப்பு மற்றும் கற்பித்தலுக்கு ஒரு நல்ல சூழலை வழங்குவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் சமூகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக அமைகின்றன என்று அவர் கூறினார். உள்ளூர் மொழி, இலக்கியம் மற்றும் இசை ஆகியவற்றின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் சிறப்பு மையங்களை உருவாக்கியுள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார் . இந்தியக் கலாச்சாரத்தை, குறிப்பாக பழங்குடி சமூகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, ஆய்வு செய்து, பரப்புவதற்காக ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தைக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பாராட்டினார்.
***
(Release ID: 2009713)
ANU/PKV/PLM/RS/KRS
(Release ID: 2009769)
Visitor Counter : 97