ஆயுஷ்
azadi ka amrit mahotsav

வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 27 FEB 2024 4:15PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் (ஆர்ஐஎஸ்) புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான ஆர்ஐஎஸ் உடன் கல்வி ஒத்துழைப்பு மற்றும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். ஆயுஷ் அமைச்சகம் சார்பாக அந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சாவும் ஆர்ஐஎஸ் சார்பாக அதன் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதியும் இந்த ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறையில் திறன் மேம்பாடு, தேசிய, மண்டல மற்றும் சர்வதேச அளவில் ஆராய்ச்சி, கொள்கை கலந்துரையாடல் மற்றும் வெளியீடுகளில் ஒத்துழைப்பு போன்றவை வலுப்படும். ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆர்ஐஎஸ் இடையேயான கல்வி ஒத்துழைப்பில் இந்திய பாரம்பரிய மருத்துவம் குறித்த அமைப்பின் தொடர்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின்போது ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா பேசுகையில், ஆயுஷ் அமைச்சகம் ஆர்ஐஎஸ் உடன்  இணைந்த பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், கொள்கை ஆவணங்கள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை ஆர்ஐஎஸ் வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் ஆயுஷ் உற்பத்தித் துறை 8 மடங்கு வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆயுஷ் சேவைத் துறை குறித்த அறிக்கைகளை ஆர்ஐஎஸ் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடும் என்றும் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா தெரிவித்தார்.

ஆர்ஐஎஸ் தலைமை இயக்குநர் பேராசிரியர் சச்சின் துர்வேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். சர்வதேச வர்த்தகத்தில் சந்தை மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கிய மற்றும் பரந்த கண்ணோட்டம் தொடர்ந்து தேவைப்படுகிறது என்றும் அதை நோக்கி தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

***

(Release ID: 2009401)

ANU/PKV/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 2009514) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu