பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜனநாயக அடிப்படையில் உலக சமுதாயம் கூட்டாக அமைதியை நிலைநிறுத்துவதற்கு செயலாற்ற வேண்டும்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மிலன் கடற்படைப் பயிற்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted On: 21 FEB 2024 6:21PM by PIB Chennai

பகிரப்பட்ட அமைதி மற்றும் வளத்திற்காக உலக நாடுகள் முனைப்புடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்றும், ஜனநாயகம்  மற்றும் விதிகள் அடிப்படையில் அமைதியை கூட்டாக நிலை நாட்ட வேண்டும் என்றும் சர்வதேச சமுதாயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளின் கூட்டு கடற்படைப் பயிற்சியான மிலன் பயிற்சியின் 12-வது பதிப்பின் முறைப்படியான  தொடக்க விழா இன்று (பிப்ரவரி 21, 2024) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தூதர்கள், கடற்படைத் தளபதிகள் மற்றும் கடல்சார் படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமைதி' என்ற கோட்பாடு குறித்த தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். போர்கள் மற்றும் மோதல்கள் இல்லாதது மட்டுமே அமைதி என்று கூறிவிட முடியாது என்று அவர் தெரிவித்தார். பகிரங்கமாக மோதிக்கொள்ளாமல், மற்றவர்களை பலவீனப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது மறைமுக மற்றும் எதிர்மறை அமைதி என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். இதைத்தாண்டி நேர்மறையான அமைதி தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். இது பாதுகாப்பு, நீதி மற்றும் ஒத்துழைப்பு போன்ற பரந்த அம்சங்களை உள்ளடக்கியது என்று அமைச்சர் தெரிவித்தார். நேர்மறையான அமைதி என்பது அனைவரின் ஒத்துழைப்புடன், பகிரப்பட்ட அமைதியாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி மிகத் தெளிவாக எடுத்துரைத்திருப்பதாக திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

ஆயுதப் படைகள் போர்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அமைதியைப் பராமரிப்பதிலும் பங்காற்றுவதாக அவர் கூறினார். பேரிடர்களின் போது பல்வேறு மனிதாபிமான உதவிகளை ஆயுதப்படைகள் வழங்குவதாக அவர் தெரிவித்தார். அமைதி மற்றும் பகிரப்பட்ட நன்மைக்காக போராடும் அதே வேளையில், கூட்டு நல்வாழ்வு, கடற்கொள்ளைத் தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு போன்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதில் இருந்து கடற்படை பின்வாங்காது என அவர் தெரிவித்தார். மேற்கு இந்தியப் பெருங்கடலில் அண்மையில் நடந்த சம்பவங்கள், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், கடற்கொள்ளை, விமானக் கடத்தல் முயற்சிகள் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் தமது உரையில், பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்த மிலன் கூட்டு கடற்படைப் பயிற்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மிலன் என்பது கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பலதரப்பு கூட்டு கடற்படை பயிற்சியாகும். பிப்ரவரி 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், இந்தியக் கப்பல்கள் மற்றும் 16 வெளிநாட்டு போர்க்கப்பல்கள், ஒரு கடல்சார் ரோந்து விமானம் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர்.

 

'மிலன்' என்றால் சங்கமம் என்று பொருள்படும். இந்தப் பயிற்சி சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பின் நிலையான உணர்வைக் குறிக்கிறது. இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வையுடன், அமைதி மற்றும் வளம் என்ற பகிரப்பட்ட நோக்கத்தை அடைவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை உருவாக்க இந்த பயிற்சி செயலாற்றுகிறது.

***

ANU/AD/PLM/RS/DL


(Release ID: 2007824) Visitor Counter : 111


Read this release in: English , Urdu , Hindi