மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், கடலோர வளர்ப்பு பண்ணைகளின் பதிவுக்கான சிறப்பு முகாமை தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடத்தியது

Posted On: 14 FEB 2024 5:10PM by PIB Chennai

பண்ணையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்திடம் பதிவு செய்வதின் முக்கியத்துவத்தை விளக்குவதற்கான முதல் முகாமானது நாகப்பட்டினத்தில் இன்று (14.02.2024) நடத்தப்பட்டது. இந்த முகாமானது கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. சொந்த நிலங்களில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேற்கொள்வோரும், பல்வேறு காரணங்களால் தங்களின் பதிவை புதுப்பிக்க இயலாதவர்களும் புதுப்பிக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு, இந்த புதுப்பித்தலை எளிதாக்கியுள்ளது. தகுந்த பதிவுக் கட்டணத்துடன் இரு மடங்கு கட்டணத்தை அபராதமாக செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். இது நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட பண்ணைகளின் பதிவுகளை முறைப்படுத்த உதவும். இந்த  முகாமில் பங்கேற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழில் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பண்ணையாளர்களுக்கு உதவுவதற்க்காக கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் அந்தந்த மாநில மீன்வளத்துறை மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் இம்முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

மிகப்பெரிய அளவிலான இந்த ஊக்குவிப்புத் திட்டம் பண்ணையாளர்களுக்கு உதவியாக அமைவதுடன் பண்ணைகளை சட்டப்பூர்வமாக்கவும், 100 சதவீத பதிவு மற்றும் புதுப்பித்தலை அடையவும் உதவும்.

இன்றைய முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பண்ணையாளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். மேலும் மீன்வள அதிகாரிகளும் தங்களிடம் இருந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

இதில் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், மீன் வளர்ப்போர் சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம், மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறையின் கீழ் செயல்படுகிறது. நாட்டில் கடலோர வளர்ப்பு பண்ணைகளின் பதிவை 100 சதவீத அளவுக்கு அடைவதற்கான முகாமை  இது தொடங்கியுள்ளது. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005, பிரிவு 13-ன் படி ஒருவர் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யாமல், மற்றும் புதுப்பிக்காமல் இருப்பது, கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய (திருத்த) சட்டம் 2023, பிரிவு 14-ன் படி அபராதத்திற்குரிய நடவடிக்கையாகும். இந்தக் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் முக்கியப்பணி, கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நீடித்த முறையில் மேம்படுத்துவதாகும்.

    

 

    

--------------

(Release ID: 2005946)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2006014) Visitor Counter : 86


Read this release in: English , Urdu , Hindi , Telugu