வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

புத்தொழில் இந்தியா முன்னெடுப்பு: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் வரை 7,559 புத்தொழில் நிறுவனங்களைத் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை அங்கீகரித்துள்ளது

Posted On: 12 FEB 2024 1:26PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு  2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்னெடுப்பைத் தொடங்கியது.

நாட்டில் ஒரு துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள், ஊக்கத்தொகைகளை உள்ளடக்கிய புத்தொழில் நிறுவனங்களுக்கான செயல் திட்டத்தை அரசு வெளியிட்டது. இந்தச் செயல் திட்டம் "எளிமைப்படுத்துதல், கையாளுதல்", "நிதி ஆதரவு, ஊக்கத்தொகை", "தொழில்துறை கல்விக் கூட்டாண்மை, தொழில் காப்பகம்" போன்ற பகுதிகளுடன் 19 செயல் வகைகளை உள்ளடக்கியது. செயல் திட்டத்தின் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் புத்தொழில் சூழல் அமைப்பை அங்கீகரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி , புத்தொழில் இந்தியா தொடக்க நிதித் திட்டம், புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகிய மூன்று முன்னோடித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் காப்பகங்கள் மூலம் புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதி உதவி வழங்கப்படுகிறது. புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதியத்தில் ரூ.945 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில், மொத்தம் ரூ.86.10 கோடி அளவிற்கு 20 தொழில் காப்பகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் காப்பகங்களுக்கு  2023 டிசம்பர் 31 வரை ரூ.43.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியம் மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. இது இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் மாற்று முதலீட்டு நிதியாக மூலதனத்தை அளித்து புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடாக அளிக்கிறது. புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியத்தில் ரூ.10,000 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி மொத்தம் ரூ.500 கோடியை 6 மாற்று முதலீட்டு நிதியத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது.  2023 டிசம்பர் 31 வரை மாற்று முதலீட்டு நிதியத்திற்கு ரூ.384 கோடி வழங்கியுள்ளது.

தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள் மூலம் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்க உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறைக்கு பிணையமில்லா கடன்களை வழங்குவதற்காக புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தேசியக் கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2023 ஏப்ரல் 1 முதல் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி, தகுதியான அங்கீகரிக்கப்பட்ட 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.8.65 கோடி மதிப்பிலான  கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முன்னெடுப்பின் கீழ் தமிழ்நாடு உட்பட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், நகரங்கள், சிறிய நகரங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் 2016-ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை 2023 டிசம்பர்  31 நிலவரப்படி 1,17,254 ஆக அதிகரிக்க வழிவகுத்தது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி மொத்தம் 7,559 புத்தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தொழில், வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

ANU/SMB/IR/RR/KV



(Release ID: 2005207) Visitor Counter : 106


Read this release in: English , Urdu , Hindi