அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார்


மாணவர்களின் விண்வெளித் திறன்களை மேம்படுத்த கடந்த மாதம் நடத்தப்பட்ட விண்வெளி ஹேக்கத்தான் குறித்து ஆய்வு செய்தார்

Posted On: 11 FEB 2024 6:07PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இன்று (11-02-2024) புதுதில்லியில் அறிவியல் தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார். மாணவர்களின் விண்வெளித் திறன்களை மேம்படுத்த கடந்த மாதம் நடத்தப்பட்ட விண்வெளி ஹேக்கத்தான் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

2024 ஜனவரி 17 முதல் 20 வரை ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இந்திய சர்வதேச அறிவியல் விழா - 2023  நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விண்வெளி தொடர்பாக 30 மணி நேர ஹேக்கத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஹேக்கத்தான் திட்டத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், ஒரு மாத காலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். ஃபரிதாபாத்தில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு 57 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்ட கூட்டுக் கூட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில், புவி அறிவியல், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் பணி இடங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு அறிவியல் பிரிவுகளிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க திரு ஜிதேந்திர சிங் தொடங்கிய அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைய கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை, அணுசக்தித் துறை, இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

*******

ANU/PKV/PLM/DL


(Release ID: 2005041) Visitor Counter : 99


Read this release in: English , Urdu , Hindi