சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தில்லி இந்தியா கேட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான கருப்பொருள் கண்காட்சி மற்றும் சுற்றுத் சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் 2,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்
Posted On:
11 FEB 2024 4:31PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை (Lifestyle for Environment) என்ற கருப்பொருளில் இரண்டு நாள் தேசிய கண்காட்சி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகள் பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தில்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் அவர்களின் படைப்பாற்றலையும் இதில் வெளிப்படுத்தினர். இரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 3,000 க்கும் மேற்பட்டோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
இரண்டாவது நாளில், பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான தங்கள் யோசனைகளைத் தெரிவித்தனர். ஓவியம் மற்றும் சுவரொட்டி தயாரிக்கும் போட்டியும் நடைபெற்றது. பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த தங்கள் கருத்துகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்தினர்.
கழிவு மேலாண்மை குறித்து ஒரு பயிலரங்கமும் நடத்தப்பட்டது. இதில் உலர்ந்த மற்றும் ஈரமான கழிவுகளை எவ்வாறு வீடுகளில் எளிதாக பிரிப்பது மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கழிவு மேலாண்மையை எவ்வாறு மிகவும் பயனுள்ளதாக மேற்கொள்வது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பல்வேறு அரசு சாரா நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தன. சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், மரம் அல்லாத வன விளைபொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட பயன்பாட்டுப் பொருட்கள், சமையலறை கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம், மின்சார அடுப்பை இயக்குவதற்கான சிறிய சோலார் பேனல் உள்ளிட்ட பல சுற்றுச் சூழல் பாதுகாப்பு சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) இந்தியாவின் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்ட மையமான இஐஏசிப் (EIACP), ஆகியவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு மக்கள் இயக்கமாக பிரதமர் நரேந்திர மோடியால் லைஃப் (LiFE) எனப்படும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கையுடன் இணைந்த மற்றும் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க தனிநபர்களையும் சமூகங்களையும் தூண்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
*******
ANU/PKV/PLM/DL
(Release ID: 2005023)
Visitor Counter : 118