சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலக ஈரநில தினத்தையொட்டி மேலும் ஐந்து இடங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படுகிறது – நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்கிறது: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்
Posted On:
31 JAN 2024 3:30PM by PIB Chennai
உலக ஈரநில தினம் பிப்ரவரி 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படுவதையொட்டி மேலும் ஐந்து ஈரநிலங்களை ராம்சார் தளங்களாக அறிவிக்கப்படுவதன் மூலம் நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 80-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் ராம்சார் தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ராம்சார் தள கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் முசோண்டா மும்பாவை தாம் சந்தித்து பேசியதாகவும், அவரிடம் ஐந்து தளங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை ஒப்படைத்ததாகவும் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்து வரும் முக்கியத்துவம், முன்னுதாரணமான மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். புதிய ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 5 இடங்களில் 3 இடங்கள் கர்நாடகாவில் அமைந்துள்ளன. அங்காசமுத்ரா பறவைகள் பாதுகாப்பு சரணாலயம், அகனசினி கழிமுகம் மற்றும் மாகடி கெரே பாதுகாப்பு சரணாலயம் ஆகியவை கர்நாடகா மாநிலத்தில் உள்ளன.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் லாங்வுட் சோலை காப்புக்காடுகள் ஆகிய இரண்டு இடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலில் இந்த ஐந்து ஈரநிலங்களைச் சேர்த்துள்ளதன் மூலம், நாட்டில் ராம்சார் தளங்களின் கீழ் உள்ள மொத்த பரப்பளவு இப்போது 1.33 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான 16 ராம்சார் தளங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 10 ராம்சார் தளங்கள் உள்ளன. 1971-ம் ஆண்டு ஈரானில் உள்ள ராம்சார் நகரில் கையெழுத்திடப்பட்ட ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்த தரப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி ஈரநிலங்கள் குறித்த இந்த சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் இந்த தினம் சர்வதேச ஈரநில தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 2022-ல், சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் மொத்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கையை 75-ஆக உயர்த்துவதில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மத்திய அரசின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளின் காரணமாக, கடந்த பத்து ஆண்டுகளில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 26 முதல் 80 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 38 இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு உலக ஈரநில தினத்தின் கருப்பொருள் ‘ஈரநிலங்களும்- மனித நலனும்’ என்பதாகும். நடப்பாண்டில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்தியப்பிரதேச மாநில அரசுடன் இணைந்து, ராம்சார் தளமான இந்தூரின் சிர்பூர் ஏரியில் உலக ஈரநில தின நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து புதிதாக அறிவிக்கப்பட்ட ஈரநிலங்கள் தொடர்பான விவரங்கள்
- 453.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஈரநிலங்களில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக உள்ளது. நெல், கரும்பு, பருத்தி, சோளம் மற்றும் துவரை போன்ற வேளாண் பயிர்களை பயிரிடுவதற்கு கிராம மக்களால் சதுப்பு நில நீர் பயன்படுத்தப்படுகிறது. கரைவெட்டியில் அதிக எண்ணிக்கையிலான நீர்ப்பறவைகள் உள்ளன. சுமார் 198 வகையான பறவைகளும் இங்கு உள்ளன.
- லாங்வுட் சோலைக் காப்புக்காடு 'வெப்பமண்டல மழைக்காடாகும்'. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதன் பரப்பளவு 116.007 ஹெக்டேர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 26 உள்ளூர் பறவை இனங்களில் 14 பறவை இனங்கள் இந்த ஈரநிலங்களில் காணப்படுகின்றன .
***
(Release ID: 2000838)
ANU/SV/PLM/KPG/KRS
(Release ID: 2000958)
Visitor Counter : 333