மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (சி.எஸ்.எல்) முக்கிய பாதுகாப்பு சார்ந்த திட்டங்களின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த முக்கியமான திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட 310 மீட்டர் நீளமுள்ள புதிய உலர் துறைமுகம் மற்றும் இந்தியாவின் முதல் முழுமையாக உருவாக்கப்பட்ட தூய கப்பல் பழுதுபார்க்கும் சூழல் அமைப்பான சர்வதேச கப்பல் பழுதுபார்ப்பு வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்) மற்றும் ஐ.ஓ.சி.எல்லின் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகியவற்றை மத்திய அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை கொச்சியில் தொடங்கி வைக்கிறார். திரு சோனோவால் மற்ற முக்கிய திட்டங்களையும் ஆய்வு செய்தார் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சோனோவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறது. கப்பல் போக்குவரத்தும் இதற்கு விதிவிலக்கல்ல, ஏனெனில் இந்தியக் கப்பல்களின் எண்ணிக்கயை அதிகரிக்கவும், வெளிநாட்டுக் கப்பல்களை சார்ந்திருப்பதை முடிந்தவரை குறைக்கவும் நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், பசுமை கப்பல்கள் உற்பத்தியில் இந்தியாவின் கப்பல் துறை வாய்ப்புகளை வலுப்படுத்தும் லட்சியமான பசுமை இழுவை மாற்ற திட்டம் (ஜி.டி.டி.பி) உட்பட கப்பல் துறைக்கு தேவையான உத்வேகத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்தியாவின் கப்பல் துறைக்கு வலுவான சூழல் அமைப்பை வழங்க கொச்சியில் கப்பல் பழுதுபார்க்கும் தளங்கள் கொண்ட தொகுப்பை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார்.
ரூ.4,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு சோனோவால், "கடல்சார் துறையில் உலகளாவிய புகழ் பெற்ற நாடாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சியில் சி.எஸ்.எல் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடி இந்த முக்கியத் திட்டங்களை தொடங்கி வைத்து அர்ப்பணிப்பதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் சி.எஸ்.எல் அதன் வருவாயை ரூ .7,000 கோடியாக இரட்டிப்பாக்க தயாராக உள்ளது. இந்த முன்முயற்சிகள் பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் முன்னேற்றம், மேம்பாடு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பயனுள்ள ஊக்கிகளாகவும் செயல்படும். இது உண்மையிலேயே 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்பதன் சாராம்சத்தை பிரதிபலிக்கிறது. தேசிய பெருமையின் வெளிப்பாடாக, இந்தத் திட்டங்கள் பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மையில் இந்தியாவின் திறமைக்கு சான்றாக திகழ்கின்றன என்று தெரிவித்தார்.
***
(Release ID: 1996676)
ANU/ SMB/PKV/RR/KRS