எரிசக்தி அமைச்சகம்
ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது
Posted On:
16 JAN 2024 2:01PM by PIB Chennai
மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் (ஜே.பி.ஒய்) மதிப்பிலான 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டுக்கான, அதன் முதலாவது பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், இந்நிறுவனத்தின் பசுமை நிதிக் கட்டமைப்பு, ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு வணிகக் கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் ஒப்புதல்களுக்கு இணங்க தகுதிவாய்ந்த பசுமைத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
பரிவர்த்தனையின் முக்கிய அம்சங்கள்
சர்வதேசப் பத்திர சந்தையில் ஆர்.இ.சி நிறுவனத்தின் பதினோராவது முயற்சி மற்றும் தொடக்க யென் பத்திர வெளியீடு, இது இந்திய பொதுத்துறை நிறுவனம் வெளியிடும் முதலாவது யென் பசுமைப் பத்திரம் ஆகும்.
5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டு பத்திரங்கள் முறையே 1.76%, 1.79% மற்றும் 2.20% லாபத்தில் வெளியிடப்படுகின்றன.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய யூரோ-யென் வெளியீடு
இந்தியாவிலிருந்து மிகப் பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
இந்தப் பரிவர்த்தனை ஜப்பானிய மற்றும் சர்வதேச கணக்குகள் இரண்டிலிருந்தும் ஆர்வத்தைக் கண்டது, ஒவ்வொன்றிலிருந்தும் ஆர்டர்களின் எண்ணிக்கை 50% ஆக இருந்தது, சர்வதேச ஒதுக்கீடு வேறு எந்த இந்திய யென் ஒப்பந்தத்திற்கும் மிக உயர்ந்த ஒன்றாகும்.
பத்திர வெளியீட்டு நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ஆர்.இ.சி நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு விவேக் குமார் தேவாங்கன், "இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு நிதியளிப்பதற்கான தொலைநோக்கு அணுகுமுறை தேவைப்படுகிறது. இது தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்திப் பரவலை நோக்கிய நிலைத்த வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. இந்தப் பசுமை வெளியீட்டின் மூலம் பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தியை ஊக்குவிக்கும் தனது உறுதிமொழியில் ஆர்.இ.சி உறுதியாக நிற்கிறது. சர்வதேசக் கடன் மூலதனச் சந்தைகளில் அடிக்கடி வெளியிடுபவர் என்ற முறையில், நாங்கள் எப்போதும் புதிய சந்தைகளைப் பெறுவதற்கும் எங்கள் நிதி ஆதாரங்களை மேலும் பன்முகப்படுத்துவதற்கும் முயற்சி செய்கிறோம். எங்கள் தொடக்க யூரோ-யென் பசுமைப் பத்திரங்களுக்கு வெற்றிகரமாக விலை நிர்ணயிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
ஆர்இசி நிறுவனம் பற்றி ஆர்.இ.சி என்பது மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு 'மகாரத்னா' நிறுவனமாகும். இது வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி), பொது நிதி நிறுவனம் (பி.எஃப்.ஐ) மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (ஐ.எஃப்.சி) என ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மின் உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்கள், பேட்டரி சேமிப்பு, பம்ப் சேமிப்பு திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா திட்டங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய முழு மின்-உள்கட்டமைப்பு துறைக்கும் ஆர்.இ.சி நிதியளிக்கிறது. மிக சமீபத்தில், சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், தகவல் தொழில்நுட்பத் தகவல்தொடர்பு, சமூக மற்றும் வணிக உள்கட்டமைப்பு (கல்வி நிறுவனம், மருத்துவமனைகள்), துறைமுகங்கள் மற்றும் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் (ஈ & எம்) பணிகளை உள்ளடக்கிய மின்சாரம் அல்லாத உள்கட்டமைப்பு துறையிலும் ஆர்.இ.சி பன்முகப்படுத்தியுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு சொத்துக்களை உருவாக்குவதற்காக மாநில, மத்திய மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு முதிர்வு காலக் கடன்களை ஆர்.இ.சி வழங்குகிறது.
********
ANU/ SMB/PKV/RR/KV
(Release ID: 1996663)
Visitor Counter : 143