சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய நிறுவனம் (பிஐஎஸ்) 77-வது நிறுவன தினத்தை சென்னையில் இன்று கொண்டாடியது
Posted On:
05 JAN 2024 3:58PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய நிறுவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப்பொருட்கள் மற்றும் ஆய்வக சேவைகளின் ஹால் மார்க்கிங் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
பி.ஐ.எஸ் நாட்டிற்கு சேவை செய்வதில் 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 06 ஜனவரி 2024 அன்று 77 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
77 வது பி.ஐ.எஸ் நிறுவன தினம் - 2024 நிகழ்ச்சியின் முக்கிய விழா 05 ஜனவரி 2024, வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது.
பி.ஐ.எஸ்-சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் விஞ்ஞானி திருமதி.ஜி.பவானி வரவேற்றார். பி.ஐ.எஸ் நிறுவன தினத்தை முன்னிட்டு, 01 ஜனவரி 2024 முதல் பி.ஐ.எஸ் நிறுவனத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 02-04 ஜனவரி 2024 அன்று 16 அரசுப் பள்ளிகளில் ஒரு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், இதில் ஸ்டாண்டர்ட் கிளப் மாணவர்களுக்கு ஸ்லோகன் எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல், பேச்சுப் போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தனது உரையின் போது தெரிவித்தார். எனவே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பள்ளிகளுக்கு ரூ.25,000 மதிப்புள்ள இலவச விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், 2024 ஜனவரி 01-04 தேதிகளில் 15 தொழிற்சாலைகளில் தர இணைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.
பி.ஐ.எஸ். விஞ்ஞானியும், தென் மண்டல துணை தலைமை இயக்குநருமான திரு யு.எஸ்.பி யாதவ் திட்ட நோக்கங்களை வழங்கினார். 1947 முதல் பி.ஐ.எஸ் நீண்ட தூரம் வந்துள்ளதாகவும், தொழில் கூட்டாளர்களின் ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனைகள் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். இன்று பிஐஎஸ் 22,000 க்கும் மேற்பட்ட தரநிலைகளை உருவாக்கியுள்ளது என்றும், பிஐஎஸ் இன் அனைத்து தரச் சான்றிதழ் திட்டங்களும் தொழில்துறைக்கு பெரிய அளவில் பங்களித்துள்ளன என்றும் அவர் கூறினார். தரப்படுத்தல் / சான்றிதழ் நடவடிக்கைகளில் கல்வியாளர்கள் பங்கேற்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் தலைமை இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான விக்ரம் கபூர், ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தனது தொடக்க உரையின் போது, 76 ஆண்டுகளை நிறைவு செய்து, நாட்டுக்கு ஆற்றிய சேவையின் 77-வது ஆண்டை எட்டியதற்காக பி.ஐ.எஸ்ஸைப் பாராட்டினார். தரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அவரது காலத்தில் தேயிலைத் தொழிலை அது எவ்வாறு பாதித்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டினார். அரசு, பள்ளிகள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான தர மேம்பாட்டு நடவடிக்கைகள், தர உணர்திறன் திட்டங்கள் போன்றவற்றுக்காக பி.ஐ.எஸ்ஸை அவர் பாராட்டினார். அனைத்து மாநிலங்களிலும், மாவட்ட அளவிலும் பி.ஐ.எஸ் இருக்கும் என்று அவர் கூறினார். இன்றைய விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
விஞ்ஞானி டி.ஜீவானந்தம், பல ஆண்டுகளாக பி.ஐ.எஸ்ஸின் தர மேம்பாட்டு நடவடிக்கைகளின் பரிணாம வளர்ச்சி குறித்து விளக்கமளித்தார்.
இதைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அகில இந்திய அளவில் முதல் உரிமம் பெற்றவர்கள், 64 தொழிற்சாலை மற்றும் சந்தையில் எடுக்கப்பட்ட மாதிரிகளை மதிப்பீடு செய்வதன் மூலம் 3 வருட காலப்பகுதியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் உரிமதாரர்கள், பி.ஐ.எஸ் நிறுவன தின தேசிய மற்றும் பிராந்திய வினாடி வினா போட்டிகளில் பரிசுகளை வென்ற 43 மாணவர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தூர்தர்ஷன் பொதிகை செய்திகளின் மூலம் பிஐஎஸ் விழிப்புணர்வு செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்த தூர்தர்ஷன் பொதிகையின் இயக்குநரும் பிராந்திய செய்திப் பிரிவின் தலைவருமான திரு குருபாபு பலராமனுக்கு அமானக் வீர் விருது மற்றும் பி.ஐ.எஸ் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பாட்டு, நடனம், ஸ்கிட், மைம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
###
PKV/KV
(Release ID: 1993535)
Visitor Counter : 207