இரண்டாவது வகை நீரிழிவு நோய் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் புகழ்பெற்ற நீரிழிவு நோய் நிபுணரும், மத்திய இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
வாரணாசி மாவட்டத்தின் புராணா ராம்நகர் கிராமத்தில் கிராமப்புற நீரிழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தை இன்று (29.12.2023) மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
கிராமங்களில் நீரிழிவு நோய் வேகமாக பரவுவது மிகவும் கவலைக்குரியது என்று அவர் தெரிவித்தார். இதுவரை உடல் உழைப்பற்ற பணக்காரர்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரிடையே காணப்பட்ட இந்த நோய், கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். உடல் உழைப்பு இல்லாதது மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.
கிராமப்புற இந்தியாவில் நீரிழிவு தடுப்பு மற்றும் மேலாண்மைக்கு இந்த முன்முயற்சியை எடுத்ததற்காக சர்க்கரை நோய் ஆராய்ச்சி அமைப்பை அவர் பாராட்டினார். இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டிய அவர், உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிப்பதாக கூறினார்.
நீரிழிவு நோய் பாதிப்பின் விளிம்பில் இவ்வளவு அதிக மக்கள் இருக்கும் சூழலில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக இரண்டாம் வகை நீரிழிவு நோய் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். பெருநகரங்களில் அதிகம் காணப்பட்ட இந்நோய் தற்போது கிராமங்களிலும் அதிகரிப்பதாக அவர் கூறினார். 35 வயதுக்குட்பட்டவர்களும் இந்நோயால் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த தேசிய அளவில் இலவச ரத்த சர்க்கரை பரிசோதனை இயக்கம், பொது சுகாதார காப்பீட்டு கொள்கை, ஆயுஷ்மான் பாரத், நல்வாழ்வு மையங்கள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சிறுநீரக டயாலிசிஸ் வசதி, யோகாவை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
***
(Release ID: 1991491)
ANU/PKV/PLM/RS/KRS