மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
காசியில் காலை நேரம்: காசியின் ஆன்மீகத் தன்மை, இசை மற்றும் யோகா இணைந்த இணையற்ற நிகழ்வு
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி ஆகியோர் அஸ்ஸி படித்துறையின் பிரம்மாண்டத்தைக் கண்டு பெரிதும் வியந்தனர்
Posted On:
25 DEC 2023 6:09PM by PIB Chennai
காசியில் காலை நேரம் என்ற நிகழ்வை அனுபவிக்காமல் காசிப் பயணம் முழுமையடையாது. நாடு முழுவதிலுமிருந்து வரும் பயணிகள் அஸ்ஸி படித்துறையில் மனம் மயக்கும் காலை நேரக் காட்சியைக் காண விரும்புகிறார்கள். அங்கு அவர்கள் கங்கையின் மென்மையான அலைகளை ரசிக்க முடியும். இருளில் இருந்து சூரிய உதயத்தை வரவேற்க முடியும். சூரிய பகவானின் முழு தோற்றம் வரை அவர்கள் ரசிக்கலாம்.
அஸ்ஸி படித்துறையில், இந்த வசீகரமான காட்சி இசையின் இனிமைக்கு மத்தியில் நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உணர்வுள்ள நபர்கள் யோகா பயிற்சி, கற்பித்தல் ஆகிய இரண்டிலும் இங்கு ஈடுபடுகின்றனர்.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் இன்று (25-12-2023) அஸ்ஸி படித்துறையில் இந்தக் காலை நேர அனுபவத்தைப் பெற்றனர்.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி இது குறித்து தமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசினார். காசியின் ஆன்மீக கலாச்சாரம், இசை, யோகா ஆகியவை அஸ்ஸி படித்துறையில் ஒருங்கிணைவதாகவும் இதில் தாம் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். புனித நகரமான காசியில் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்-2023' நிகழ்ச்சியில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பு தமக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். பன்முகத்தன்மை நிறைந்த, கலாச்சார நல்லிணக்கம் கொண்ட, ஒன்றோடொன்று தொடர்புடைய இந்தியாவின் இரண்டு வளமான கலாச்சாரங்களின் இணைப்பு இந்த காசி தமிழ் சங்கமம் என்று அவர் தெரிவித்தார். இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமை தம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வு நமது பண்பாட்டுத் தேசியத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பெரிய அதிர்ஷ்டமாக உணர்வதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு இதே நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம் இரட்டிப்பு அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அவர் தெரிவித்தார். காசி மற்றும் அஸ்ஸி படித்துறையின் சூழல் தமது எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக உள்ளது என்றும் இந்த மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் மத்திய இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கூறினார்.
அதிகாலை விடியலின்போது நடைபெறும் காசியில் காலை நேரம் நிகழ்ச்சியின்போது கங்கையின் அலைகள் மீது சூரியக் கதிர்கள் பிரகாசிக்கும். அத்துடன் இசைக் குழுவினர் இசைக்கும் ராகங்கள் இணைவதால் இது சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. ஒரு காலத்தில் காலை நேரங்களில் வெளிநாட்டினரின் படகு சவாரி மட்டுமே நடந்தது. இப்போது ஒரு பரந்த அனுபவமாக பரிணமித்துள்ளது. 'காசியில் காலை நேரம்' என்பது உத்தரப்பிரதேச அரசின் ஒரு தனித்துவமான முயற்சியாகும். இந்த முன்முயற்சி, எப்போதும் பாயும் வற்றாத கங்கையால் சூழப்பட்ட வசீகரிக்கும் நகரமான வாரணாசியின் புத்துணர்ச்சியைப் பதிவு செய்வதிலும் அனுபவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது. வாரணாசியில் உள்ள அஸ்ஸி படித்துறையில் 'காசியில் காலை நேரம்' தொடங்கப்பட்டிருப்பது அரசின் கூட்டு முயற்சியின் விளைவாகும்.
******
AD/SMB/PLM/KPG
(Release ID: 1990314)
Visitor Counter : 119