சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் தகவல் தொடர்பு குறித்த சர்வதேசக் கருத்தரங்கு இன்று தொடங்கியது

Posted On: 21 DEC 2023 3:16PM by PIB Chennai

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மின்னணுவியல் மற்றும் தொடர்புத் துறையின் சார்பாகத்  “தொடர்பு அமைப்புகள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கு விக்ரம் சாராபாய் வளாகத்தில் இன்று (21.12.2023) தொடங்கியது. தைவான் தேசிய சுங் செங் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவுக்கான தைவான்-இந்தியா கூட்டு ஆராய்ச்சி மையம் தொழில்நுட்ப ரீதியாக இக்கருத்தரங்கிற்கு உதவிசெய்கிறது.

 

இக்கருத்தரங்கை சிறப்பு விருந்தினரான பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர்  முனைவர் கே.தரணிக்கரசு தொடங்கிவைத்தார். புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் (பொறுப்பு) முனைவர் உஷா நடேசன் தலைமை வகித்தார். கழகத்தின் பதிவாளர் முனைவர் சீ. சுந்தரவரதன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக காரைக்கால் வளாகத்தின் மையத் தலைவர்  முனைவர் புவனேஸ்வரி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

 

இக்கருத்தரங்கின் நோக்கம் குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் அனிருத்த கன்ஹே எடுத்துரைத்தார்.

 

இக்கருத்தரங்கில் தேசிய சுங் செங் பல்கலைக்கழகத்தின் தைவான்-இந்திய கூட்டு ஆராய்ச்சி மையம் செயற்கை நுண்ணறிவுப் பேராசிரியர்,  முனைவர். பாவோ ஆன்,  பிரான்ஸ் நாட்டின் போர்டெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சந்தக் முகர்ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

 

இக்கருத்தரங்கிற்காக ஐஐடிகள், என்ஐடிகள், மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 150க்கும் அதிகமான ஆவணங்கள் பெறப்பட்டு, அனைத்து ஆவணங்களும் இக்கருத்தரங்கின் குழு உறுப்பினர்கள், சர்வதேச மற்றும் தேசிய மதிப்பாய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, சுமார் 54 ஆவணங்கள் விளக்கக்காட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இக்கருத்தரங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 54 ஆவணங்களும் மின் பொறியியல் தொடர் பற்றிய ஸ்பிரிங்கர் விரிவுரை குறிப்புகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

 

இக்கருத்தரங்கை முனைவர் அனிருத்த கன்ஹே, துறை உறுப்பினர்களின் உதவியோடு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

***

SMB/KV

  

 


(Release ID: 1989131)
Read this release in: English