அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நோய்தடுப்பு சுகாதார மேலாண்மையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது -மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 15 DEC 2023 5:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கொவிட் மேலாண்மையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதாகவும், தடுப்பூசி நடைமுறைகளில் இந்தியாவை உலகம் பாராட்டுவதாகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய அளவில், மருத்துவமனை நிர்வாகத்தில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு மருத்துவமனை அகாடமி சிறப்பு விருதுகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கொவிட் சூழலை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது என்றார். நோய் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

 

 

பல்வேறு அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலோபதியைத் தாண்டி ஆயுஷ், யோகா போன்ற மாற்று வழிகளை ஒருங்கிணைப்பதன் மூலமும் மட்டுமே புதிய இந்தியா சுகாதாரத்துறையில் தன்னிறைவு அடையும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

கொவிட் காலத்தில் மேற்கத்திய நாடுகள் கூட ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார். பல்வேறு நோய்களுக்கான பல தடுப்பூசிகளை உற்பத்தி செய்தன் மூலம் இந்தியா இன்று உலகின் தடுப்பூசி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

"பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா, உலகின் மிகவும் செலவு குறைந்த மற்றும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மையமாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2019-2022 காலகட்டத்தில் வெளிநாட்டினருக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொற்றுபாதிப்பு காலத்திலும் இந்தியா உலகின் மருத்துவ சுற்றுலா மையமாக வேகமாக வளர்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட சுகாதார புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். தொலை மருத்துவ சேவை தொடர்பான நடவடிக்கைகள், 2025-ம் ஆண்டில் 5.5 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

***

ANU/PKV/PLM/AG/KRS



(Release ID: 1986822) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Hindi