சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சி சென்னையில் டிசம்பர் 13- 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

Posted On: 13 DEC 2023 7:59PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சி சென்னை மைலாப்பூரில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி, வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் டாக்டர் எல் சுப்பிரமணியன் சணல் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். கண்காட்சியை கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் திரு டி. ஐயப்பன் ஒருங்கிணைத்துள்ளார். மத்திய அரசின் ஜவுளிக் குழுவின் உதவி இயக்குநர் திருமதி பூர்ணிமா,  தரக்கட்டுப்பாட்டு அலுவலர் திரு பொன்னுசாமி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது பேசிய தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் டாக்டர் எல் சுப்பிரமணியன், தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி சணல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவோர் பல்வேறு சணல் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இத்தகையை தொழில் நிறுவனங்கள்  பெருநிறுவனங்களை அணுகி, சணல் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் திரு டி. ஐயப்பன் பேசுகையில், தேசிய சணல் வாரியத்தின் திட்டங்களின் கீழ், பலன்களை பெறுவதற்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த சணல் தொழிலில் ஈடுபடுவோர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சணல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம், உற்பத்தியுடன் கூடிய சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம், சணல் சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கான திட்டம் உள்ளிட்ட தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு  தொழில் திட்டங்களுக்கான மானிய உதவிகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சென்னை மையிலாப்பூர்  காமதேனு திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையும் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்காட்சியில் சணலால் செய்யப்பட்ட  பொம்மைகள்,  சணல் பைகள்,  பரிசுப் பொருட்கள், காலணிகள், தரைவிரிப்புகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    

 

    

***

AD/BS/RS/KRS


(Release ID: 1986025)
Read this release in: English