பாதுகாப்பு அமைச்சகம்
சைனிக் பள்ளிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகள்
Posted On:
11 DEC 2023 2:19PM by PIB Chennai
சைனிக் பள்ளிகளின் முதன்மை நோக்கம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வதற்கு தகுதி வாய்ந்தவர்களை கல்வி ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயார்படுத்துவதாகும். 33 சைனிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் திறனை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கலந்துரையாடல் பயிற்சி மற்றும் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்தல், மெதுவாகக் கற்பவர்களுக்கான தீர்வு வகுப்புகள், சமீபத்திய கற்பித்தல் நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கான சேவைப் பாடநெறி மற்றும் பயிற்சி, விருந்தினர் விரிவுரைகள் மற்றும் மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும் சுற்றுப்பயணங்கள் போன்றவை இதில் அடங்கும்.
1961-ஆம் ஆண்டில் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் 05 சைனிக் பள்ளிகள் அரசால் திறக்கப்பட்டன. இருப்பினும், மக்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்காக பல்வேறு சமூக-பொருளாதார பின்னணிகளிலிருந்து இளைஞர்களை ஈர்ப்பதற்கும், பின்னர் நாடு முழுவதும் மேலும் 28 சைனிக் பள்ளிகள் திறக்கப்பட்டன, மொத்தம் 33 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில், 2021 ஆம் ஆண்டில், அரசு, தனியார் பள்ளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுடன் கூட்டாண்மை முறையில் புதிய சைனிக் பள்ளிகளை நிறுவும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை மொத்தம் 42 பள்ளிகள் கூட்டாண்மை முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 19 பள்ளிகளில் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பாலின சமத்துவத்தை அடைவதற்காகவும், ஆயுதப்படைகளில் பெண்களைச் சேர்ப்பதற்கு வழிவகுப்பதற்காகவும், 2021-22 ஆம் ஆண்டு முதல் 33 சைனிக் பள்ளிகளிலும் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சைனிக் பள்ளிகள் பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதிலும், அவர்களை நல்ல குடிமக்களாகவும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவும் தயார்படுத்துவதிலும் ஒரு முன்மாதிரியாக பரிணமித்துள்ளன.
சைனிக் பள்ளிகள் மாணவர்களிடையே குடிமைப் பொறுப்புணர்வையும், தலைமைத்துவ உணர்வையும் வளர்ப்பதற்காக பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அனைத்து சைனிக் பள்ளிகளிலும் தலைமைத்துவ முறை பின்பற்றப்படுகிறது, அங்கு மாணவர்களுக்கு தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்காக குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
சைனிக் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், இதன் மூலம் குடிமைப் பொறுப்புகள் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
சைனிக் பள்ளிகள் சமூகப் பணிகள் மற்றும் சமூக சேவைத் திட்டங்களை மேற்கொள்கின்றன. மரம் நடும் இயக்கங்கள், தூய்மை பிரச்சாரங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளில் தன்னார்வத் தொண்டு போன்ற முயற்சிகளிலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்க்க உதவுகிறது.
பல்வேறு சூழல்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு மாணவர்கள் திறனை வெளிப்படுத்த கல்விச் சுற்றுப்பயணங்கள் மற்றும் வருகைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த அனுபவங்கள் தகவமைப்பு, கலாச்சார புரிதல் மற்றும் பெரிய சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்க்க உதவுகின்றன.
மாணவ, மாணவியரிடையே பண்பு, தைரியம், ஒழுக்கம் ஆகிய பண்புகளை வளர்க்க உதவும் என்.சி.சி. கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.வத்ஸுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு அஜய் பட் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/BS/AG/KPG
(Release ID: 1985161)
Visitor Counter : 90