சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அரசுத் திட்டங்களின் பயன்கள் வீடுதேடி வருகின்றன: தருமபுரி மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை தொடர்ந்து நடைபெறுகிறது

Posted On: 07 DEC 2023 5:10PM by PIB Chennai

அரசுத் திட்டங்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய காலம் போய்விட்டது. இப்போது மத்திய அரசால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை  எனப்படும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் அரசின் நலத்திட்டப் பயன்கள் வீட்டு வாசலுக்கே வருகின்றன.  அரசு சேவைகள் கடைசி நிலை வரை முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும், தேசிய அளவிலான இந்தப் பயணம் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

படம்: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காளப்பம்பாடியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை

இம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில்  தொடங்கிய நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை இதுவரை இரண்டு வட்டங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சென்றடைந்துள்ளது. இந்த யாத்திரை நடைபெறும் இடங்களில் பல்வேறு மத்திய அரசுத் துறைகளின் சேவைகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் பயன்களும் உடனடியாக அவர்களைச் சென்றடைகின்றன.  இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அது தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன. 

இந்த யாத்திரை நடைபெறும் இடங்களில் அஞ்சல் துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் புதிய சேமிப்பு வங்கி கணக்குகளைத் தொடங்குவதற்கான வசதிகளை வழங்குகின்றன.  செல்வ மகள் சேமிப்புத் திட்டக் கணக்குகள், தொடர் வைப்புக் கணக்குகள், பொது வருங்கால வைப்பு நிதி, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் ஓய்வூதிய திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், மகளிர் சேமிப்பு சான்றிதழ் மற்றும் பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் பயன்களை அடைவதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.  ஆதார் புதுப்பித்தல் சேவைகள், குழந்தை ஆதார் பதிவு, அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சேவைகளும் அஞ்சல் துறையால் இந்த யாத்திரையில் வழங்கப்படுகின்றன.

படம்: தருமபுரி வட்டம், வெள்ளோலை ஊராட்சியில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் ஒரு பகுதியாக காசநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நடைபெறும் இடங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் அரிவாள் செல் இரத்த சோகை பரிசோதனை வசதிகளையும் பொதுமக்கள் பெறலாம். 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களுக்கு தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சிக்கு தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட மை பாரத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள கிராமப் புற இளைஞர்கள் இந்த யாத்திரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். யாத்திரை நடைபெறும் இடங்களில் உள்ள நேரு யுவகேந்திரா அதிகாரிகள் கிராமப்புற இளைஞர்களுக்கு மை பாரத் தளத்தில் சேர உதவுகின்றனர்.

படம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அச்சரஹள்ளி ஊராட்சி, தொட்டலம்பட்டியில், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் ஒரு பகுதியாக நடைபெறும் ட்ரோன் செயல் விளக்க நிகழ்ச்சி

கிசான் கடன் அட்டை, மண்வள அட்டை போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு விவசாயிகள் பதிவு செய்யலாம். வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், தருமபுரி பகுதி விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயம், மற்றும் பல்வேறு வேளாண் நுட்பங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் விளைநிலங்களில் நானோ திரவ யூரியா மற்றும் உரங்களை தெளிப்பதற்கான ட்ரோன் தொழில்நுட்பத்தின் செயல்விளக்கத்தை வழங்குகிறது.

மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின்போது பல்வேறு வங்கி சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, அரசுத் திட்டங்களின் பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்வது, மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம்பெறுகின்றன.

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை வரும் நாட்களில் பின்வரும் அட்டவணையின்படி தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும்:

•    டிசம்பர் 08, 2023: சின்னப்பள்ளி, பெரும்பாலை ஊராட்சி வி.முத்தம்பட்டி, கொண்டகரஹள்ளி ஊராட்சிகள்

•    டிசம்பர் 09, 2023: தொண்டகுட்டஹள்ளி, மஞ்சரஹள்ளி ஊராட்சி திப்பிரெட்டிஹள்ளி, கொடுஹள்ளி ஊராட்சிகள்

•    டிசம்பர் 10, 2023: சுங்கல்நத்தம், ராமகொண்டஹள்ளி ஊராட்சி இருமாத்தூர், கொங்கரப்பட்டி ஊராட்சிகள்

•    டிசம்பர் 11, 2023: நாகமரை, அஜ்ஜனஹள்ளி ஊராட்சி, பன்னிகுளம், வகுரப்பம்பட்டி ஊராட்சி

•    டிசம்பர் 12, 2023: தடங்கம், ஏ.ஜெட்டிஹள்ளி ஊராட்சி ஈச்சம்பாடி, கதிர்நாயக்கனஹள்ளி ஊராட்சிகள் (மொரப்பூர் வட்டம்)

•    டிசம்பர் 13, 2023: அதியமான்கோட்டை, மாதேமங்கலம் ஊராட்சிகள் நாவலை, போலியம்பள்ளி ஊராட்சி

•    டிசம்பர் 14, 2023: தின்னஹள்ளி, மிட்டரெட்டிஹள்ளி ஊராட்சி கோபிநாதம்பட்டி, கொசப்பட்டி ஊராட்சிகள்

•    டிசம்பர் 15, 2023: லாலிகம், நார்த்தம்பள்ளி ஊராட்சி சாமண்டஹள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறலாம். நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் விரிவான அட்டவணை https://viksitbharatsankalp.gov.in/public-events என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

*******

ANU/AD/SMB/PLM/KV

 


(Release ID: 1983596) Visitor Counter : 231


Read this release in: English