ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்திய உர சங்கத்தின் 59 வது ஆண்டு மாநாட்டை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்


நானோ டிஏபி, நானோ யூரியா போன்ற உரங்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியாவாகும் : மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 06 DEC 2023 5:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறமையான மற்றும் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்திய உரத் துறை 14 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் உரங்களை திறம்பட வழங்கி வருவதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

 இந்திய உர சங்கத்தின் 59 வது ஆண்டு மாநாடு - 2023 ஐ புதுதில்லியில் இன்று அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உரத் துறையில் ஒரு வலுவான சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார். உரத் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்த அவர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.  கடந்த சில ஆண்டுகளில், உலக அளவில் உர விலைகள் உயர்ந்தபோதும் இந்தியாவில் நிலையான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் அரசால் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை ஊக்குவித்தல், சீரான ஊட்டச்சத்து மூலம் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ரீதியாக சிறந்த தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


விவசாயத் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் அமைச்சர் எடுத்துரைத்தார். நானோ டிஏபி மற்றும் நானோ யூரியா போன்ற நானோ உரங்களை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா என்று அவர் கூறினார். இது ஊட்டச்சத்து பயன்பாட்டு நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். பிரதமரால் அண்மையில் தொடங்கப்பட்ட ட்ரோன் திட்டம், ட்ரோன் மூலமான உரத் தெளிப்பு சேவைகளை குறைந்த செலவில் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்யும் என்றும் அவர் தெரவித்தார்.

 சுமார் 2 லட்சம் பிரதமரின் வேளாண் வள மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளதாகவும், அவை அனைத்து விவசாய நடவடிக்கைளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் மையங்களாகச் செயல்படுகின்றன என்றும் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். 


இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 56 கண்காட்சியாளர்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்திய கண்காட்சியையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரத்துறை செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ரா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Release ID: 1983179



(Release ID: 1983338) Visitor Counter : 95


Read this release in: English , Hindi