பாதுகாப்பு அமைச்சகம்

முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக பெரு நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted On: 29 NOV 2023 4:58PM by PIB Chennai

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்படும் துணிச்சல் மிக்க ராணுவ வீரர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த, ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடை அளிக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பெரு நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (நவம்பர் 29, 2023) புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சகத்தின், முன்னாள் படைவீரர் நலத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

ஓய்வு பெற்ற மற்றும் சேவையில் உள்ள ஆயுதப்படை வீரர்களின் ஈடு இணையற்ற வீரம் மற்றும் தியாகங்களைப் பாராட்டிய திரு ராஜ்நாத் சிங், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வது ஒட்டுமொத்த தேசத்தின் கூட்டுப் பொறுப்பு என்றார்.  கடினமான சூழ்நிலைகளில் வீரர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதாகவும், சவால்களை தைரியமாக எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறையினர் மற்றும் கார்ப்பரேட்  நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபடுவதாக அவர் கூறினார். பெரு நிறுவனங்கள் வரி செலுத்துதலைத் தவிர தங்களது லாபத்தை சமூக நலனுக்காகவும், குறிப்பாக  ஆயுதப்படை வீரர்களுக்காகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கட்டாய கடமைகளை விட தன்னார்வ பங்களிப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் குறிப்பிட்டார்.  

இந்நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், ஈசிஜிசி லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், எல்ஐசி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட முக்கிய பெரு நிறுவன பொறுப்புணர்வு நிதி வழங்கும் நிறுவனங்களை  திரு ராஜ்நாத் சிங் கௌரவித்தார்.

இந்த மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி திரு மனோஜ் பாண்டே, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை செயலாளர் திரு விஜோய் குமார் சிங், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஆயுதப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 1980790)

ANU/AD/PLM/AG/KRS



(Release ID: 1980935) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Hindi