மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சாந்த கவி பீமா போயி மற்றும் மஹிமா வழிபாட்டுப் பாரம்பரியம் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
Posted On:
25 NOV 2023 6:23PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புவனேஸ்வரில் 'சாந்த கவி பீமா போயி மற்றும் மஹிமா வழிபாட்டு மரபு' குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கை இன்று (25-11-2023) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், துணைவேந்தர்கள், சிறந்த பேச்சாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் போது சாந்த கவி பீமா போயி மற்றும் மஹிமா வழிபாட்டின் பாரம்பரியம் குறித்த ஒரு சிறிய படம் காண்பிக்கப்பட்டது.
ஒடிசாவின் மத்திய பல்கலைக்கழகம், குரு காசிதாஸ் விஸ்வவித்யாலயா, ஆந்திராவின் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம், புவனேஸ்வரில் உள்ள எஸ்ஓஏ நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் ஒடியா மொழி ஆய்வுகளுக்கான சிறப்பு மையம், சிஐஐஎல் ஆகியவை கல்வி அமைச்சகத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திரப் பிரதான், சாந்த பலராம் தாஸின் லக்ஷ்மி புராணம் மற்றும் சந்தா கபி பீமா போயின் தத்துவம் மற்றும் கவிதைகள் சமூக பிரச்சினைகளை எவ்வாறு நிவர்த்தி செய்தன என்பதை எடுத்துரைத்தார். ஒடியா சமூகத்தின் கலாச்சார மற்றும் இலக்கிய உணர்வை மீண்டும் எழுப்புவதில் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர் என்று அவர் எடுத்துரைத்தார்.
மகிமா தர்மமும் அதன் தத்துவமும் வாழ்க்கையில் எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஒடிசாவின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பரப்பில் வேரூன்றிய மஹிமா வழிபாடு, எளிமை, சமத்துவம் மற்றும் உருவமற்ற தெய்வீகத்திற்கான பக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையாகும்.
மஹிமா கோசீன், சாந்த கவி பீமா போயி மற்றும் பிஸ்வநாத் பாபா ஆகியோரின் வாழ்க்கை, படைப்புகள், மற்றும் கலாச்சார அம்சங்களில் மஹிமா வழிபாட்டின் ஆழமான தாக்கத்தை ஆராய்வதை இந்த கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, புவனேஸ்வரில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான இளைஞர் விழா நிகழ்ச்சியில் திரு தர்மேந்திரப் பிரதான் கலந்து கொண்டார். இளைஞர்களை ஊக்குவிப்பதும், அவர்களிடையே கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களை ஒன்றிணைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையைப் பின்பற்றி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஏற்பாட்டாளர்களுக்கு திரு தர்மேந்திரப் பிரதான் பாராட்டுத் தெரிவித்தார்.
*****
ANU/PKV/PLM/DL
(Release ID: 1979794)
Visitor Counter : 102