குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

காந்திநகரில் உலக தொழில்முறை பட்டய கணக்காளர்கள் மாநாட்டை குடியரசுத் துணைத்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்

நிதி மற்றும் கணக்கியல் செயல்முறைகளின் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது – குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 24 NOV 2023 6:23PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று (24.11.2023) குஜராத்தின் காந்திநகரில் உலகளாவிய தொழில்முறை பட்டயக் கணக்காளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்தார்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், வரி ஏய்ப்பு மற்றும் நிதி மோசடிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறினார்.  வற்றைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு கணக்காளர்களின் திறன் வலிமை வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

கணக்காளர்கள் எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் சிறந்த நடைமுறைகளை வரையறுத்து பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

வரித் திட்டமிடலுக்கும், வரி ஏய்ப்புக்கும் இடையில் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளதாகவும்,  பட்டயக் கணக்காளர்கள் எப்போதும் வரித் திட்டமிடலை ஆதரிக்கவும், வரி ஏய்ப்பைக் கண்டிக்கவும் வேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பட்டயக் கணக்காளர்கள் உறுதியாக இருந்தால் நிதி மற்றும் கணக்குத் தாக்கலில் சட்ட மீறல்கள் நடைபெறாது என்று அவர் கூறினார். 2047-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்களின் பங்கு முக்கியமானது என்று குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும், குறைபாடுகளைக் கண்டறிவதிலும், பெருநிறுவனங்களின் மோசடிகளைக் கண்டறிவதிலும் அவர்களின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.

தற்போது உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2030 ஆம் ஆண்டிற்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற  நிலைக்குச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை  நவீனத்துவத்தின் முயற்சி என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக இது அமைந்துள்ளது என்றார். இந்த நடைமுறையை சிறப்பான  மற்றும் எளிமையான வரி நடைமுறையாக வடிவமைத்ததில் பட்டயக் கணக்காளர்களின் பங்கையும் அவர் பாராட்டினார்.

நிதி மற்றும் கணக்கியல் செயல்முறைகளின் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.  இதில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ), நாட்டின் நிதி மற்றும் கணக்கியல் கட்டமைப்பைக் கட்டமைப்பதிலும், தரப்படுத்துவதிலும், நிலைநிறுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 இந்நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், சர்வதேச கணக்காளர்கள் கூட்டமைப்பின் (ஐஎஃப்ஏசி) தலைவர் திருமதி அஸ்மா ரெஸ்மூகி, இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தலைவர் ஐசிஏஐ தலைவர் சி.ஏ. அனிகேத் எஸ். தலாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

***

ANU/AD/PLM/RS/KRS
(Release ID: 1979541)



(Release ID: 1979568) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi , Gujarati