சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய தலைநகரப் பகுதியான (என்சிஆர்) தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க முழு என்சிஆர் பகுதியிலும் ஜிஆர்ஏபி-யின் 4-ம் நிலையின்படி 8 அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பரிந்துரை
प्रविष्टि तिथि:
05 NOV 2023 6:07PM by PIB Chennai
தேசிய தலைநகரப் பகுதியான (என்சிஆர்) தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க முழு என்சிஆர் பகுதியிலும், தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை செயல் திட்டமான ஜிஆர்ஏபி-யின் 4-ம் நிலையின்படி 8 அம்ச செயல் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வழங்கிய தினசரி காற்றுத் தரக்குறியீட்டின்படி தில்லியின் சராசரி காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 454-ஐ எட்டியுள்ளது. தில்லி-என்சிஆரில் சாதகமற்ற வானிலை நிலைமைகள் காரணமாக காற்றுத் தரம் மோசமடைந்துள்ளது. இதையடுத்து காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின், தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை செயல் திட்டத்தை (ஜிஆர்ஏபி) செயல்படுத்துவதற்கான துணைக் குழு இன்று கூடியது. இந்த கூட்டத்தில் தில்லி பகுதியின் ஒட்டுமொத்த காற்றின் தர சூழ்நிலை, வானிலை நிலைமைகள் மற்றும் காற்று தரக் குறியீட்டிற்கான முன்னறிவிப்புகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
காற்றின் தரத்தின் தற்போதைய போக்கைக் கருத்தில் கொண்டும், பிராந்தியத்தில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும் முயற்சியாகவும், ஜிஆர்ஏபி-யின் 4-ம் நிலையின் கீழ் திட்டமிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முழு என்சிஆர் பகுதியிலும் உடனடியாக செயல்படுத்த துணைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது மற்ற மூன்று நிலைகளின் கீழ் குறிப்பிடப்பட்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விட கடுமையானதாகும்.
ஜிஆர்ஏபி-யின் 4-ம் நிலையின்படி 8 அம்ச செயல் திட்டம் முழு தேசிய தலைநகர் பகுதியிலும் (என்சிஆர்) இன்று முதல் அமலுக்கு வருவதை உறுதி செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த 8 அம்ச செயல் திட்டத்தில் உள்ள அம்சங்கள்:
1. தில்லிக்குள் லாரி போக்குவரத்து நிறுத்தம் (அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் / மின்சார டிரக்குகள் தவிர).
2. தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட இலகு ரக வணிக வாகனங்களை தில்லிக்குள் அனுமதிப்பதில்லை
3. தில்லியில் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தவிர பிற டீசலில் இயங்கும் நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை இயக்க தடை.
4. நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், பாலங்கள், மின் பரிமாற்றம் போன்ற திட்டங்களில் கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தடை
5. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை நிறுத்தி இணையதள முறையில் பாடங்களை நடத்துவது குறித்து முடிவு செய்யலாம்
6. தில்லி என்சிஆர் பகுதியில் உள்ள மாநில அரசுகளின் அலுவலகங்கள், மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
7. மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து மத்திய அரசு உரிய முடிவு எடுக்கலாம்
8. கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை மூடுவது, அவசரம் அல்லாத வணிக நடவடிக்கைகளை நிறுத்துவது, பதிவு எண்களின் ஒற்றைப்படை அடிப்படையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் அவசர நடவடிக்கைகளை தில்லி தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மாநில அரசுகள் பரிசீலிக்கலாம்
மேலும், ஜிஆர்ஏபி-யை செயல்படுத்துவதில் ஒத்துழைக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் சுவாச, இருதய, பெருமூளை அல்லது பிற நீண்டகால நோய்கள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜிஆர்ஏபி-யின் திருத்தப்பட்ட அட்டவணை ஆணையத்தின் இணையதளமான caqm.nic.in என்ற தளத்தில் உள்ளது.
****
PLM/DL
(रिलीज़ आईडी: 1974887)
आगंतुक पटल : 134