சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் இளம் மாணவர்கள் வளர்ந்து வரும் தொழிநுட்பத்தில் கவனம் செலுத்தவேண்டும்; புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் பேச்சு
Posted On:
02 NOV 2023 7:18PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சார்பில் மூன்று முக்கிய நிகழ்வுகள் அடங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் துவக்க விழாவும், அதைத் தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை தொழில் நிறுவன இடைமுகத்தின் ( PUDoCS CIII) பிரமாண்டமான தொடக்க விழாவும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் மன்றம் முறைப்படி தொடங்கப்பட்டது. இதில் கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கணினி அறிவியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.கே.வி.ஜெயக்குமாா் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினாா். விருந்தினர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், துறையின் ஆற்றல்மிக்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் டீன் பேராசிரியர் எஸ்.சிவசத்யா, இந்த முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கணினித் துறைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் ஜோசப் செல்வின், வளர்ந்து வரும் நவீன ஆராய்ச்சிச் சிக்கல்களில் கவனம் செலுத்துமாறு ஆய்வு மாணவர்களை ஊக்குவித்தார்.
மாண்புமிகு துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையுரையாற்றினார். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் இளம் மாணவர்களின் பங்கை அவர் வலியுறுத்தினார். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அவற்றைப் பயன்படுத்தும் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் குறித்தும் அவர் விளக்கினார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஏஐபியின் உலகளாவிய தலைவர் டாக்டர் கே.எம்.சுசீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உள்நாட்டிலியே சைபர் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். டி.சி.எஸ்ஸின் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி சான்றிதழ் படிப்பில் கணினி அறிவியல் துறை மாணவர்கள் சேர்ந்து இலவசமாகப் படிக்கும் அரிய வாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இங்கிலாந்து நிறுவனமான ஜெனரல் எஸ் 4 டெக்னாலஜிஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தலைவருமான திரு ஜவஹர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார். ஜெனரேட்டிவ் ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் புதிய துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அவர் ஊக்குவித்தார்.
வி.ஐ.டி.யின் தொழில் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சாமுவேல் ராஜ்குமார், மாணவர்கள் சிறப்பான சுயவிவரக் குறிப்பினை உருவாக்குவதற்கான தெளிவான வழிமுறையை விவரித்தார். மேம்பட்ட வேலைவாய்ப்புக்குத் தனித்துவமான திறன்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சாய்ராம் குழும கல்வி நிறுவனங்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் முனைவர் எல்.அருணாசலம், மாணவர்கள் ஹேக்கத்தான்களில் பங்கேற்று பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பயனுள்ள நேர மேலாண்மை மற்றும் ஸ்மார்ட்போன்களின் ஸ்மார்ட் பயன்பாடு குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியை டாக்டர் சுனிதா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியைத் திட்டமிட்டுச் செயல்படுத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
AD/KRS
(Release ID: 1974282)
Visitor Counter : 78