புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் 6-வது கூட்டத்தை தில்லியில் இந்தியா நடத்துகிறது
Posted On:
31 OCT 2023 6:11PM by PIB Chennai
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) ஆறாவது கூட்ட அமர்வு புதுதில்லியில் 2023 அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (31.10.2023) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) தலைவரும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சருமான திரு. ஆர்.கே. சிங் உரையாற்றினார். இதில் 20 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திரு ஆர்.கே. சிங், உலக மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர், அதாவது மொத்தம் 600 கோடி மக்கள், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில் வசிப்பதாகத் தெரிவித்தார். சூரிய சக்தியை எரிசக்தி ஆதாரமாக மாற்றுவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கும், உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, உலக நன்மைக்கான ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். உலக வெப்பமயமாதல் சவாலை எதிர்கொள்ளும் மிக முக்கியமான அமைப்புகளில் ஐஎஸ்ஏ-வும் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார். தற்போது இதில் 120 உறுப்பு நாடுகள் உள்ளன எனவும் மேலும் பல நாடுகள் ஐஎஸ்ஏ கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
எரிசக்தி வசதி இல்லாமல் வளர்ச்சி இல்லை என்று கூறிய அவர் எரிசக்தித் தேவையை சாத்தியமாக்கவே ஐஎஸ்ஏ அமைக்கப்பட்டுள்ளது என்று திரு ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
சூரிய சக்தி கூட்டமைப்பின் கூட்டம் தொடர்பான மேலும் தகவலுக்கு https://isolaralliance.org/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
****
Release ID = 1973449
AD/PLM/KRS
(Release ID: 1973522)
Visitor Counter : 215