சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

புதுச்சேரியில் தூய்மை மாரத்தான் போட்டி நடைபெற்றது

Posted On: 01 OCT 2023 2:14PM by PIB Chennai

புதுச்சேரியில் 700 பேர் கலந்துகொண்ட தூய்மை மாரத்தான் போட்டி நாடு முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ”தூய்மையே சேவை-இரு வார” சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரியில் தூய்மை மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சி இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டியை பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.க.லட்சுமி நாராயணன் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஆர்.செல்வம் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்தப் போட்டியில் 113 மாற்றுப் பாலினத்தவர் உட்பட 700 பேர் கலந்து கொண்டனர். மாற்றுப் பாலினத்தவர் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டது என்பது அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய பாலினச் சமத்துவ நடவடிக்கையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புல்வார் சாலைகளைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரம் ஓட வேண்டும் என்ற நிபந்தனையைப் பங்கேற்றோர் பூர்த்தி செய்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் என மூன்று பிரிவுகளாகப் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூபாய்10,000, இரண்டாம் பரிசு ரூபாய் 5,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூபாய் 3,000 வழங்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர் பிரிவில் மின்மினி, அஷ்மிதா மற்றும் யாஷிகா முறையே முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். பெண்கள் பிரிவில் சோனாலி, வைணவி மற்றும் விஷாலி ஆகியோரும் ஆன்கள் பிரிவில் முகிலன், கெளதம் மற்றும் செளந்தரராஜன் ஆகியோரும் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர்.

முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் ஒரு நாள்-ஒரு மணி நேரம் தூய்மைப்பணி செய்வதற்கான உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு.எஸ்.சிவகுமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் திரு.ஏ.சுரேஷ்ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

*** 

AP/DL



(Release ID: 1962753) Visitor Counter : 90


Read this release in: English