பாதுகாப்பு அமைச்சகம்

மைசூரில் 'ராணுவ ரேஷன் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளுக்கான சிறுதானியங்கள்' என்ற தலைப்பில் டி.ஆர்.டி.ஓ மாநாட்டை பாதுகாப்பு துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 29 SEP 2023 4:05PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் மைசூரில் செப்டம்பர் 29, 2023 அன்று 'ராணுவ ரேஷன் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்து தேவைகளுக்கான சிறுதானியங்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் தொடங்கி வைத்தார். மைசூரை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் (டி.எஃப்.ஆர்.எல்) இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாட்டில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவைப் பயன்படுத்துவதற்கான அறிவியல் உண்மைகள் குறித்தும், படைகள் நிலைநிறுத்தப்படும் நிலப்பரப்புகளில் நிலையான வேளாண் பதப்படுத்தும் நடைமுறைகளுக்காக சிறுதானியங்களை ஆராய்வது குறித்தும் விவாதிக்கப்படும்; சிறுதானிய பதப்படுத்துதலில் உள்ள சவால்களை கண்டறிந்து தீர்வு காணுதல்; நீடித்த ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக பாதுகாத்தல் மற்றும் சேமித்தல், மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மைக்காக சேவைகளின் உணவில் சிறுதானியங்களை ஒருங்கிணைப்பதற்கான புதுமையான வழிகளை இந்த மாநாடு அடையாளம் காணும். ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு முகமைகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாளர்களிடையே சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் குறித்த விவாதத்தை எளிதாக்குகிறது.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  தனது உரையில், சுகாதாரத்திற்கு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் டி.எஃப்.ஆர்.எல் பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், ஆயுதப்படை வீரர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறுதானியங்களை வழங்குவதை உறுதி செய்வதிலும் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், பாதுகாப்பு படைகள் தங்கள் ரேஷனில் சிறுதானியங்களைப் பின்பற்ற விரும்புகின்றன என்ற உண்மையைப் பாராட்டினார், மேலும் ஆயுதப்படைகளின் ரேஷன்களில் ஊட்டச்சத்து அம்சங்கள் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் அதன் தயாரிப்புகளை செயல்படுத்துவது குறித்து இந்த மாநாடு விவாதிக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

தொடக்க விழாவில் இந்தியாவின் சிறுதானிய மனிதர் என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ பேராசிரியர் காதர் வள்ளி துடேகுலா கலந்து கொண்டார். மனித குலத்தின் நல்வாழ்வுக்கும், நோயற்ற வாழ்க்கைக்கும் சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், டி.எப்.ஆர்.எல்., ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை,  அமைச்சர் துவக்கி வைத்தார். இதில், 17 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. டி.எஃப்.ஆர்.எல் உருவாக்கிய நாட்டின் முதல் மக்கும் நீர் பாட்டிலையும் அவர் அறிமுகப்படுத்தினார். திரு அஜய் பட் முன்னிலையில் டி.ஆர்.டி.ஓ தலைவர் தொழில்துறைக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான பல்வேறு உரிம ஒப்பந்தங்களை வழங்கினார். இந்த மாநாட்டில் ஆயுதப்படை வீரர்கள், துணை ராணுவம், டிஆர்டிஓ விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் கலந்து கொள்கின்றனர்.

----

(Release ID: 1962023)

ANU/AD/PKV/KRS



(Release ID: 1962236) Visitor Counter : 88


Read this release in: English , Urdu , Hindi