வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிளாஸ்டிக் தொல்லையை கட்டுப்படுத்தும் பெங்களூரு
Posted On:
25 SEP 2023 12:44PM by PIB Chennai
விரைவான நகரமயமாக்கலில் பிளாஸ்டிக் அச்சுறுத்தலை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பிளாஸ்டிக் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, எனவே அதை முற்றிலுமாக அகற்றுவது எப்போதும் ஒரு சவாலான பணியாகவே இருக்கும். இருப்பினும், அந்த கடினமான பணியைப் பற்றி கவலைப்படாமல், நகரங்கள் அதை மேற்கொள்ளத் தயாராகிவிட்டன.
பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து அனைவரின் அன்றாட வாழ்க்கையையும் மீட்டெடுப்பதில் புதுமைகளைப் பயன்படுத்திய நகரங்களில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவும் ஒன்றாகும். தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இளநீர் விற்பனையாளர்களுடன், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களால் ஏற்படும் பரவலான கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண பெருநகர பெங்களூரு மாநகராட்சி ஒரு அற்புதமான முயற்சியை மேற்கொண்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தடுக்க அயராத முயற்சிகள் இருந்தபோதிலும், பல இளநீர் விற்பனையாளர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களைப் பயன்படுத்துவதை மாநகராட்சி அதிகாரிகள் கவனித்தனர். பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்குப் பதிலாக, காகித உறிஞ்சு குழல்களை பயன்படுத்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அவை குறைவான தீங்கு விளைவிக்கும் என்றாலும், அதிகமாக கிடைப்பது இல்லை. மேலும் அவை விலை அதிகமாகவும் உள்ளன. இதனால் விற்பனையாளர்கள் பிளாஸ்டிக்கிலிருந்து மாறுவது கடினம் என்ற உண்மையால் இந்த இக்கட்டான நிலை மேலும் மோசமடைந்தது.
இந்த சவாலுக்குப் பதிலளிக்கும் வகையில், பெங்களூரு மாநகராட்சி ஒரு செயலூக்கமான அணுகுமுறையைப் பயன்படுத்த முடிவு செய்தது. "தேங்காய்க்கு உறிஞ்சுகுழல் (ஸ்ட்ரா) இல்லாத சவால்" என்ற முன்முயற்சியை பெங்களூரு மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களின் பயன்பாட்டை தடுப்பதுடன், "உங்கள் சொந்த கோப்பையை கொண்டு வாருங்கள்" என்ற கருத்தை ஊக்குவிப்பதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைமுறைகளை ஏற்படுத்துவதை பெங்களூரு மாநகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை ஒழிப்பது மட்டுமல்லாமல், அவை இல்லாமல் இளநீர் வழங்குவது அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றை வழங்குவது போன்ற நிலையான மாற்று வழிகளை பின்பற்றுமாறு இளநீர் விற்பனையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இந்தப் புதுமையான நடவடிக்கை இளநீர் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒரு பொறுப்புணர்வை வளர்த்தது, நமது அன்றாட நடைமுறைகளில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பெங்களூருவின் துடிப்பான தெருக்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. நகரின் பல்வேறு இடங்களில் சுமார் 50 இளநீர் விற்பனையாளர்களை ஈடுபடுத்தி இந்த சவால் நடத்தப்பட்டது. இந்த சவாலை தன்னார்வலர்கள் மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் ஆர்வத்துடன் ஏற்றுகொண்டனர். ஒரு நீண்ட பயணம் எப்போதும் முதல் படியுடன் தொடங்கும். அந்த சரியான முயற்சியை பெங்களூரு மாநகராட்சி எடுத்துள்ளது.
***
ANU/PKV/AG/KPG
(Release ID: 1960357)
Visitor Counter : 130