குடியரசுத் தலைவர் செயலகம்
கிரேட்டர் நொய்டாவில் முதலாவது உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
21 SEP 2023 6:20PM by PIB Chennai
கிரேட்டர் நொய்டாவில் இன்று (21.09.2023) முதலாவது உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், உத்தரப்பிரதேசத்தின் தயாரிப்புகளை இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளின் சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை இது என்று கூறினார். 2000-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இந்த கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதையும், 66 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வர்த்தகத் தொழில் துறையினர் இதில் பங்கேற்பதையும் கண்டு மகிழ்ச்சியடைவதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தின் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கள் திறன்களை நிறுவ இது ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வர்த்தகக் கண்காட்சியில் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்துவது பாராட்டுக்குரியது என்று குடியரசுத்தலைவர் கூறினார். கைவினைப் பொருட்கள் சார்ந்த பொருட்களுடன், மாநிலத்தின் இளம் தொழில்முனைவோர், குறிப்பாக பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டாடர். தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டை அதிகரிக்க உத்தரபிரதேச அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். முதலீட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால் உத்தரப்பிரதேசம் இப்போது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது என்று அவர் கூறினார்.
96 லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசம் இந்தப்பிரிவில் முதலிடத்தில் உள்ளது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். கடல் பகுதி இல்லாமல் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக இருந்தபோதிலும், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 2017-18 ஆம் ஆண்டில் சுமார் ரூ.88,000 கோடியாக இருந்த மாநிலத்தின் ஏற்றுமதி 2022-23 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,75,000 கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ஜி 20 புது தில்லி பிரகடனத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சர்வதேச அளவில் ஒருங்கிணைப்பதும் ஒரு அம்சம் என்று அவர் கூறினார். இந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, ஜி 20 இலக்குகளுக்கு ஏற்ப நமது தேசிய மற்றும் சர்வதேச செயல்திட்ட முன்னுரிமைகளை மேம்படுத்தும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.
***
AD/ANU/PLM/RS/KRS
(Release ID: 1959488)
Visitor Counter : 118