பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா வேகமாக முன்னேற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும்: ஜம்முவில் நடந்த கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
Posted On:
12 SEP 2023 5:22PM by PIB Chennai
உலக வளர்ச்சியின் வேகத்திற்கு ஏற்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (ஆர் & டி) அதிக முதலீடு செய்யுமாறு இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இன்று (12.09.2023) ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு, இந்தியப் பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.ஐ.டி.எம்) மற்றும் ஜம்மு ஐ.ஐ.டி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த தொழில்நுட்ப கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.
இதில் பேசிய அமைச்சர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒரு சிக்கலான முயற்சி என்றும், அதற்கு புதுமையான சிந்தனைகள் தேவைப்படுகிறது என்றும் கூறினார். சில நேரங்களில் அது எதிர்பார்த்த முடிவுகளை தராது என்று கூறிய அவர், என்றாலும் கூட, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அது அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும் என அவர் தெரிவித்தார். எனவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிகளவில் மூலதன முதலீடு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா மாற்றத்துக்கான காலகட்டத்தை கடந்து வருகிறது என்று கூறிய அவர், பிற தொழில்நுட்பங்களைப் பிரதிபலித்து செயலாற்றுவதில் தவறில்லை என்று கூறினார். ஆனால் நாம் சொந்த காப்புரிமைகளை பெற வேண்டும் எனவும், அதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மிக அதிக முதலீடு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாதுகாப்புத் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சர் பட்டியலிட்டார். அரசுக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் விளைவாக 2023-24 நிதியாண்டில் ரூ. 1லட்சம் கோடி பாதுகாப்பு உற்பத்தி நடைபெற்று உள்ளதாக அவர் கூறினார். அதேபோல், ரூ.16,000 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு துறை ஏற்றுமதி விரைவில் ரூ. 20,000 கோடியை எட்டும் என்று திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங், டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், வடக்கு கட்டளைப் பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
*********
AD/ANU/PLM/RS/KRS
(Release ID: 1956660)
(Release ID: 1956757)