அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மருத்துவக் கல்வியை குறைந்த செலவு கொண்டதாகவும் எளிதில் கிடைக்க கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்


நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் 145-ல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது: திரு ஜிதேந்திர சிங்

9 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 79 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 93 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது: திரு ஜிதேந்திர சிங்

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பெங்காலி போன்ற பிராந்திய இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்கவேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்: திரு ஜிதேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மிகவும் செலவு குறைந்த சிகிச்சை மையமாக உருவெடுத்துள்ளது: திரு ஜிதேந்திர சிங்

Posted On: 02 SEP 2023 4:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மருத்துவக் கல்வியை செலவு குறைந்ததாகவும் எளிதில் கிடைக்க கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.   எந்தவொரு தகுதியான நபரும் சமூக பொருளாதார நிலை காரணமாக பின்னடைவை சந்திக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், மருத்துவக் கல்வி இந்த அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என கூறினார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 145 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது அது 260 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் 19 எய்ம்ஸ்களில் இளங்கலை படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

2014 ஆம் ஆண்டில் 51,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் இளநிலை இடங்களின் எண்ணிக்கை இப்போது 91,927 இடங்களாக அதிகரித்துள்ளது எனவும் இது 79 சதவீத உயர்வு என்றும் அமைச்சர் கூறினார். முதுநிலை படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 31,185 இடங்களிலிருந்து தற்போது 93 சதவீதம் அதிகரித்து 60,202 இடங்களாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

 

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் பெங்காலி போன்ற பிராந்திய இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தி வருவதை திரு ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

 

மருத்துவக் கல்வி இந்தியில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் பொறியியல் படிப்புகளும் இந்தியில் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார். நாடு முழுவதும் எட்டு மொழிகளில் பொறியியல் புத்தகங்களின் மொழிபெயர்ப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் காலங்களில், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியைத் தொடர முடியும் என்று அவர் கூறினார்.

 

கொவிட் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கையாண்ட பிறகு சுகாதாரத் துறையில் இந்தியாவை உலகின் பிற நாடுகள் கவனித்து வருகின்றன என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். தொழில்நுட்ப ரீதியாகவும், மனித வளத்திலும், மற்ற நாடுகளை விட, நாம் மிகவும் முன்னணியில் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

கொவிட் காலத்தில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் போன்றவற்றால் பெறப்பட்ட பலன்களால், மேற்கத்திய நாடுகள் கூட இந்தியாவைப் உற்றுப் பார்க்கத் தொடங்கின என்று அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் மருத்துவ சுற்றுலாவில் இந்தியாவின் பங்கு சுமார் 10 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். 

 

 

ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகச் சிறந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும் என்றும், அதற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும் என்றும் அவர் கூறினார். பல்வேறு அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் புதிய இந்தியா, சுகாதாரத்தில் தற்சார்பு நிலையை எட்டும் என்று மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

 

***

SM/ANU/PLM/DL



(Release ID: 1954372) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Hindi